Show all

தமிழகத்தில் பழைய கொரோனா நோயாளிகளாக சிகிச்சையில் இருப்பவர்கள் 420 பேர்கள் மட்டுமே! குணமானவர்கள் 1,485 பேர்கள். புதிய நோயாளிகள் 2153 பேர்கள்

தமிழகத்தில் பழைய கொரோனா நோயாளிகளாக சிகிச்சையில் இருப்வர்கள் 420 பேர்கள் மட்டுமே! குணமானவர்கள் 1,485 பேர்கள். புதிய நோயாளிகளாக சிகிச்சையில் இணைவோர் 2153 பேர்கள். அவர்களை அதிக பட்சம் இரண்டு கிழமைகளில் குணமளித்து வீட்டுக்கு அனுப்ப தமிழக நலங்குத்துறை முழு ஏற்பாடுகளுடன் தயார் நிலையில் இருக்கிறது.  

23,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கடந்த திங்கட் கிழமை தமிழகத்தில் அதிகமான எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகள் குணப்படுத்தப்பட்டிருந்தனர். அன்று மட்டும் 81 பேர் குணமடைந்திருந்தனர். தமிழகத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அன்று 1,101ஆக உயர்ந்திருந்தது. தமிழகத்தில் சராசரியாக குணமடையும் நபர்களின் எண்ணிக்கை எண்பதாக இருந்தது. அன்றைய நிலையில் மொத்தமாக தமிழகத்தில் சிகிச்சையில் இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை 809 மட்டுமே. 

ஆனால் கடந்த ஒரு கிழமையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே உள்ளன. அதுவும் சென்னையில் மட்டும். அதுவும் கோயம்பேடு சந்தை சார்ந்து மட்டுமே. 

இந்நிலையில், இன்று மட்டும் புதிதாக 508 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 4,058 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 279 பேருக்கும், கடலூரில் 68 பேருக்கும், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தலா 38 பேருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் 25 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இன்று 76 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இனி குணமாவதற்கு மருத்துவமனை சிகிச்சையில் பழைய கொரோனா பாதிப்பாளர்கள் 384 பேர்கள் மட்டுமே உள்ளனர். இனி வரும் நாட்களில் அவர்களில் இருந்தே குணமாவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில், இந்த கிழமையில் குணமடைவோர் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். மொத்தமாக, இதுவரை 1,485 பேர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அடுத்த கிழமையில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை அன்றாட சரசரி 200க்கு அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 

தற்போது 2,537 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1 லட்சத்து 74 ஆயிரத்து 828 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 1 லட்சத்து 65 ஆயிரத்து 191 தனிப்பட்ட நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு சார்பாக 36 மற்றும் தனியார் சார்பாக 16 என 52 பரிசோதனை மையங்கள் உள்ளன. 3,198 பேர்  கொரோனா சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவுகளில் உள்ளனர்.

நேற்று கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 56 வயதுள்ள ஆண் மற்றும் 60 அகவையுள்ள பெண் ஆகிய இருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் மேலும் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.

இன்று அதிகபட்சமான தொற்றுக்குக் காரணம் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையது என்பது நாம் அறியும் செய்தியாகும். அந்த வகைத் தொற்றுக்கள் மட்டுமே தமிழகத்திற்கான அறைகூவலாகும். அந்த எண்ணிக்கையும் படிப்படியாக குறையும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறது தமிழக நலங்குத்துறை.

இதன் பொருட்டு அதிரடி நடவடிக்கையாக, இன்று கோயம்பேடு சந்தை முழுமையாக மூடப்பட்டு சந்தை திருமழிசைக்கு மாற்றப்படுகிறது. அதற்கான அனைத்து பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கோயம்பேடு சந்தை வணிகர்கள் சங்கங்கள் அனைத்தும் அரசுக்கு ஒத்துழைப்பதாகத் தெரிவித்துள்ளன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.