கொரோனா நுண்ணுயிரி பரவாமல் தடுக்க, தனிமனித இடைவெளியை உறுதிசெய்ய, கேரளாவின் கிராமப் பஞ்சாயத்து ஒன்று குடைபிடிப்பதை உத்தரவாகப் பிறப்பித்துள்ளது. தமிழகமும் பின்பற்றலாமே. 14,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா நுண்ணுயிரி பரவாமல் தடுக்க தனிமனித இடைவெளியை உறுதிசெய்ய கேரளாவின் கிராமப் பஞ்சாயத்து ஒன்று புதிய முயற்சியை உத்தரவாகப் பிறப்பித்துள்ளது. கொரோனா நுண்ணுயிரித் தொற்று இந்தியாவில் முதன்முதலாக கேரளா மாநிலத்தில்தான் கண்டறியப்பட்டது. அதேபோல் தொடக்கக்காலத்தில் கேரளாவில்தான் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஊரடங்கு உத்தரவை சரியாக கடைபிடித்தல், பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பை கண்டறிதல், பரிசோதனையை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகளில் துரிதமாக செயல்பட்டு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. மேலும் நோயாளிகளை குணப்படுத்துவதிலும் தமிழகம் போலவே முதன்மை மாநிலமாக செயல்படுகிறது. மனித இடைவெளியை கடைபிடிக்க என்ன செய்யலாம் என யோசித்த கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள தண்ணீர்முக்கோம் கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் ஒரு முடிவுக்கு வந்தனர். அங்குள்ள மக்கள் வெளியே சென்றால் கட்டாயம் குடை கொண்டு செல்ல வேண்டும். குடையை பயன்படுத்தும்போது இரண்டு குடைகள் ஒன்றுக்கொண்டு இடிக்காமல் விரிக்கப்பட்டிருக்கும்போது எப்படியும் ஒரு மீட்டர் இடைவெளி உண்டாகும். இதனால் தானாகவே இடைவெளியை கடைபிடிக்க வேண்டியதாகிவிடும். இப்படி செய்தால் மக்கள் தானாகவே சமூக இடைவெளியை பின்பற்ற தொடங்கி விடுவார்கள் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். தண்ணீர்முக்கோம் பகுதியில் யார் எங்கு சென்றாலும் குடைபிடிப்பது கட்டாயம் என கிராமப் பஞ்சாயத்து அறிவித்துள்ளது. இந்த திட்டம் அங்குள்ள மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இதற்காக மலிவு விலையில் அங்குள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் குடை விற்பனைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடைபிடித்து செல்வதன் மூலம் ஒருவர் மற்றவரை தொடுவது தவிர்க்கப்படும் என்றும், ஒருவருக்கும் மற்றவருக்கும் இடையே குறைந்தபட்சம் ஒருமீட்டர் இடைவெளி பேணப்படும் என்றும் அம்மாநில நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார்.
கொரோனா நுண்ணுயிரி பரவலைத் தொடர்ந்து தடுக்க வேண்டிய நிலையில், மக்கள் வெளியில் சென்றால் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடித்தே ஆக வேண்டும் என்ற நிலை உள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



