Show all

தமிழகத்தின் அடுத்த கட்ட அசத்தல்! கொரோனா பரவல்தடை, கொரோனா குணமளிப்பு நடவடிக்கைகளுக்கு பதினோரு குழுக்கள்

கொரோனா பரவல்தடை, கொரோனா குணமளிப்பு நடவடிக்கைகளுக்கு பல்துறை அதிகாரிகள் அடங்கிய 11 பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா பரவல்தடை, கொரோனா குணமளிப்பு நடவடிக்கைகளுக்கு பல்துறை அதிகாரிகள் அடங்கிய 11 பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உயர்மட்ட அதிகாரிகளுடன் இன்று முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.  

முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- தலைமைச் செயலாளர் தலைமையில் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு பலமுறை கூடி ஆலோசித்துள்ளது. தலைமைச் செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி கலந்துரையாடல் மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார். நானும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

ஒன்றரை கோடி முகக் கவசங்கள் வாங்க வெளியில் இருந்து கேட்பு வழங்கப் பட்டுள்ளது. 25 லட்சம் எண்-95 முகக் கவசங்கள் வாங்கவும் கேட்பு வழங்கப் பட்டுள்ளது. 11 லட்சம் பிபிஇ பாதுகாப்புக் கவசங்கள் வாங்க கேட்பு வழங்கப் பட்டுள்ளது. 2,500 சுவாசக்கருவிகள் (வென்டிலேட்டர்கள்) வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 30 ஆயிரம் சோதனைக்கருவிகள் வாங்க கேட்பு வழங்கப் பட்டுள்ளது.

பல்வேறு துறை அதிகாரிகள் அடங்கிய 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவுக்கும் பணிகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. அவை:
1. மாநில ஒருங்கிணைப்பு, நடுவண் அரசு தொடர்புகள் மற்றும் நடுவண் தகவல் மையம்.
2. மருத்துவ உபகரணங்கள் உட்பட கட்டாயத்தேவைப் பொருட்களின் உற்பத்தி மற்றும் மாநிலங்களுக்குள்ளான நகர்வு.
3. மாநில, மாவட்ட அளவில் உணவு போன்ற கட்டாயத்;தேவைப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகம்.
4. செய்தி ஒருங்கிணைப்பு.
5. தனியார் மருத்துவப் பணிகள் ஒருங்கிணைப்பு மற்றும் தொற்றுநோய் கண்காணிப்பு.
6. போக்குவரத்து வசதிகள்.
7. நோயாளியுடன் தொடர்புகொள்வதைக் கண்டறிதல், தனிமைப்படுத்துதல் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை, மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்கள் வாங்கி பகிர்வு செய்தல்.
8. நோய்த்தடுப்பு, மருந்து தெளித்தல், மருத்துவமனைக் கட்டமைப்புகள்.
9. நிவாரண ஒருங்கிணைப்பு, தன்னார்வக் குழுக்களை ஒருங்கிணைத்தல், தனிமைப்படுத்துதல் குழுவுக்கு உதவுதல்.
10. வெளிமாநிலத் தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிமாநிலங்களில் தங்கியுள்ள தமிழகத் தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகளைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தல்
11. முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நிவாரண உதவிகளைச் செய்தல் ஆகிய 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.