Show all

சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கச் சொல்ல ஓ.பன்னீர்செல்வத்திற்கு தகுதி இல்லை

பொதுச் செயலாளர் பதவியில் சசிகலாவும், துணைப் பொதுச் செயலாளர் பதவியில் டிடிவி தினகரனும் நீடிப்பார்கள் என்று தங்கதமிழ்செல்வன் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்

     சசிகலாவைக் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று சொல்ல முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எந்த தகுதியும் இல்லை என தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் கூறினார்.

     ஆண்டிப்பட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் இன்று மாலை டிடிவி தினகரனை அவரது அடையாறு இல்லத்தில் சந்தித்து பேசினார்.

     இந்தச் சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தங்கதமிழ்செல்வன் கூறுகையில், அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன்.  ஓ.பன்னீர்செல்வம் உள்பட அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்தால் வரவேற்பதாக தினகரன் கூறியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

     மேலும் அவர் கூறுகையில், அதிமுக அமைச்சர்கள் நேற்று நடத்திய ஆலோசனை கூட்டம் கட்சித் தலைமைக்கே தெரியாது. அவர்கள் கூடி ஆலோசித்தது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. அதிமுகவின் 122 சட்டமன்ற உறுப்பினர்களும் தினகரன் பக்கமே உள்ளனர். அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதை நாளை சட்டமன்றத்தில் பார்க்கலாம்.     இரு அணிகளை இணைப்பதற்காக யாரும் கெஞ்சவில்லை. இரண்டு அணிகளும் சேர்ந்தால் சின்னத்தை மீட்கலாம் என்பது தான் நிலைப்பாடு. எங்களிடம் இருந்து பிரிந்து சென்றது தவறு என நினைத்து ஓ.பன்னீர்செல்வமே மீண்டும் வந்தால் ஏற்றுக்கொள்வோம்.

     சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று சொல்ல பன்னீர்செல்வத்துக்கு தகுதி இல்லை. பொதுச் செயலாளர் பதவியில் சசிகலாவும், துணைப் பொதுச் செயலாளர் பதவியில் டிடிவி தினகரன் நீடிப்பார்கள் என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.