ஓ.பன்னீர்செல்வம், சசிகலா அணியுடன் இணைவதை டிடிவி
தினகரன் வரவேற்றுள்ளார் என்று கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை
அடையாற்றில் உள்ள அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் கல்வி
அமைச்சர் செங்கோட்டையன் அவசர ஆலோசனையில் ஈடுப்பட்டார். அதிமுக
அணிகள் இணைவது குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி
பழனிச்சாமியுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல்
சீனிவாசன் ஆகியோர் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதனைத்
தொடர்ந்து அடையாற்றில் உள்ள டிடிவி தினகரன் வீட்டில் செங்கோட்டையன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அதன் பின்னர் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: கழகத்
தொண்டர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட
நிர்வாகிகள் என அனைத்து தரப்பினரும் பிளவுபட்டுள்ள அதிமுக மீண்டும் இணைவது குறித்து
பேசி வருகிறார்கள். அதுதொடர்பான கருத்துக்களை அதிமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரனிடம்
பேசினோம். ஓ.பன்னீர்செல்வம்
இணைந்தால் வரவேற்போம் என்று தினகரன் ஏற்கனவே சொல்லி இருக்கிறார். இந்த இணைப்பு குறித்துதான்
தற்போதும் விவாதித்தோம். ஓ.பன்னீர்செல்வம் சில நாட்களுக்கு முன்னர் இணைப்பு குறித்து
பேசினார். அதன் அடிப்படையில் நாங்கள் பேசி இருக்கிறோம். ஓ.பன்னீர்செல்வம் இணைவதை தினகரன்
வரவேற்றுள்ளார். தொடர்ந்து
இதுகுறித்து பேச குழு ஒன்றை அமைக்க பேசி இருக்கிறோம். பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும்
என்பது விரைவில் தெரியும். இரு அணியில் இருந்து யார் யார் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள்
என்பதும் பின்னர் முடிவு செய்து அறிவிக்கப்படும். பொதுச்
செயலாளர் பதவியில் சசிகலா தொடர்வாரா என்ற கோரிக்கையை ஓ.பன்னீர்செல்வம் அணி இன்னும்
வைக்கவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது ஆட்சி செய்து வருகிறார். ஆட்சி
மற்றும் கட்சி பற்றிய எந்த கேள்வியும் எழவில்லை என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



