இந்திய மற்றும் இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வந்தது. டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட் செய்தது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 79.1 ஓவர்களில் 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை முதல் நாளிலேயே இழந்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக கேப்டன் சண்டிமல் 57, கருணாரத்னே 51 ரன்கள் எடுத்தனர். இந்திய தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர். அதை தொடர்ந்து ஆடிய இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 176.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 610 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கோலி 213, புஜாரா 143, விஜய் 128, ரோஹித் சர்மா 102 ரன்கள் குவித்தார்கள். இலங்கையின் பெரேரா 3 விக்கெட்டுகளும், கமகே, ஹெராத், ஷனகா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 405 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை 3-ம் நாள் முடிவில் 9 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் எடுத்தது. அதி தொடர்ந்து 384 ரன்கள் பின் தங்கிய நிலையில் 4ம் நாள் ஆட்டத்தை இலங்கை அணி இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இறுதியாக இலங்கை அணி 166 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகள், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்த வெற்றி மூலம் இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்த டெஸ்டில், 8 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலம் தமிழக வீரர் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 300 விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் டெனிஸ் லில்லி 56 போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்ததே சாதனையாக இருந்தது. அஸ்வின் 54 போட்டியிலேயே 300 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



