இலங்கை சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதில் மூன்று போட்டிகளில் ஏற்கனவே வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் நான்காவது போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இப்போட்டியில் சஹால், ஜாதவ், புவனேஸ்வர் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ், மனீஷ் பாண்டே ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. மேலும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான டோனிக்கு இது 300 வது ஒரு நாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. ரோஹித் ஷர்மாவும் தவானும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆரம்பத்திலேயே தவான் நான்கு ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அடுத்து ரோஹித் ஷர்மாவுடன் கோலி இணைந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ரன்னை உயர்த்தினார். கோலி 131 ரன்னிலும் ரோஹித் ஷர்மா 104 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பிறகு வந்த பாண்டியா, ராகுல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 325 ரன்களை கூட தாண்டாது என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஜோடி சேர்ந்த தோனி - மனீஷ் பாண்டே ஆகிய இருவரும் மிகவும் கவனமாக விளையாடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். இறுதியாக 50 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 375 ரன்கள் குவித்துள்ளது. மனீஷ் பாண்டே 50, தோனி 49 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 376 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 42.4 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 207 ரன்களை எடுத்து 168 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இப்போட்டியில் டோனி நாட்அவுட்டாக நின்றதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிகபட்சமாக 73 முறை நாட்-அவுட்டாக கடைசி வரை களத்தில் நின்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார். அடுத்த இடத்தில தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் பொல்லாக் மற்றும் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் சமிந்தா வாஸ் ஆகியோர் உள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



