மோடியின் முன்னுரிமைத் திட்டமான டிமானிடைசேஷன் என்று ஆங்கிலத்தில் கூறப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கை திட்டம் எதற்காக அறிவிக்கப் பட்டது என்பது யாருக்கும் தெரியாது. அதற்கு ஒரு உண்மையான நோக்கம் மோடிக்கு இருந்திருக்க வேண்டும். அதை அவர்கள் முறையாக அறிவிக்காமல் தடுமாறிக் கொண்டிருந்ததை அனைவரும் அறிவோம். அதிலிருந்து, மோடியின் உண்மையான நோக்கம் வெளியிடத் தக்கது அன்று என்பது தெளிவாகத் தெரிகிறது! 1.கணக்கில் வராத பணத்தை வெளியே கொண்டுவருவதற்கான நோக்கம்; (அப்படியானால் ரொக்கமாக எவ்வளவு கருப்புப் பணம் இருக்கிறது என்பதைப் பற்றி அரசிடம் புள்ளிவிவரம் ஏதும் இல்லை.) 2.கள்ள ரூபாய் தாள்களை ஒழிக்கும் நோக்கம் (அப்படியானால் அரசால் நேரடியாக கட்டுப் படுத்த முடியாமல் கள்ளரூபாய் தாள்கள் புளக்கத்தில் உள்ளன) என்று இரண்டு நோக்கங்கள் அறிவிக்கப் பட்டு, கடந்த ஆண்டு நவம்பர் 8 அன்று 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று மோடி அரசு அறிவித்தது. இப்படி செல்லாததாக ஆக்கப்பட்ட பணத்தின் மொத்த மதிப்பு 15.44 லட்சம் கோடி ரூபாய். அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில், அந்த நாளின் நள்ளிரவு முதல், 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் மதிப்பிழந்தன. இந்த ரூபாய் தாள்களை வைத்திருந்தவர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தி, புதிய ரூபாய்தாள்களாக திருப்பி எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இப்படித் திருப்பி எடுப்பதிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கணக்கில் வராத பணத்தை வைத்திருப்போர் வங்கியில் அதைச் செலுத்த மாட்டார்கள், அதனால் சட்டவிரோதப் பணம் பெருமளவில் ஒழியும் என்பதே அரசின் நோக்கமாக நம்ப வைக்கப் பட்டது. இதற்கு மாறாக, ஜூன் 30 வரை 15.28 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் வைப்பாகச் செலுத்தப்பட்டதாக ரிசர்வ் வங்கி அறிக்கை கூறுகிறது. இதன்படி மதிப்பு நீக்கப்பட்ட ரூபாய்தாள்களில் சுமார் 99 விழுக்காடு வங்கிக்குத் திரும்பி வந்துள்ளது. எனவே, கிட்டத்தட்ட ரொக்கமாக இருந்த கருப்புப் பணம் முழுவதும் வங்கிக்கு வந்துவிட்டது. உண்மையில் அரசு சொன்னபடி அது ஒழியவில்லை. கள்ள ரூபாய்தாள்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிக்கும் இந்த பண நீக்க நடவடிக்கை பெரிய அளவில் உதவியதாகத் தெரியவில்லை. ஏப்ரல் 2016 முதல் மார்ச் 2017 வரையில் கண்டுபிடிக்கப்பட்ட 500 ரூபாய், 1000 ரூபாய் கள்ள ரூபாய்தாள்களின் எண்ணிக்கை 5,73,891 என்கிறது ரிசர்வ் வங்கி புள்ளிவிவரம். மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட மொத்தம் 24.02 பில்லியன் ரூபாய்தாள்களில் இது சுழியம் விழுக்காட்டை விடக் கொஞ்சம் அதிகம். அவ்வளவே. முந்தைய ஆண்டில் பணநீக்க நடவடிக்கை ஏதும் இல்லாமலே கண்டுபிடிக்கப்பட்ட 500 ரூபாய், 1000 ரூபாய் கள்ள ரூபாய்தாள்களின் எண்ணிக்கை 4,04,794. எனவே, பண மதிப்பு நீக்க நடவடிக்கை அரசால் சொல்லப்பட்ட இரண்டு நோக்கங்களை நிறைவேற்றுவதிலும் தோல்வி அடைந்துவிட்டது. இந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கை இந்தியாவின் மிகப்பெரிய ரொக்கப் பொருளாதாரத்தை மோசமாகப் பாதித்தது. அமைப்புசாரா துறைகளைச் சேர்ந்த 2.5 லட்சம் தொழில் அலகுகள் மூடப்பட்டதாகவும், ரியல் எஸ்டேட் துறை பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும், பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தங்கள் வேலையை இழந்ததாகவும் பாஜகவின் தொழிற்சங்கப் பிரிவான பாரதீய மஸ்தூர் சங்கமே ஒப்புக்கொண்டுள்ளது. பரவலாக ரொக்கத்திலேயே கொடுக்கல் வாங்கல் நடக்கும் வேளாண்மைப் பொருளாதாரமும் பெரிய அளவில் அடி வாங்கியது. வேளாண்பெருமக்கள் விளைவித்த பருப்பு, காய்கறிகளுக்கு போதிய அளவில் விலை கிடைக்காமல் போனது. பல மாநில அரசுகள் வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்தன. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த நடவடிக்கையால் பெரிய அளவில் ரொக்கப் பற்றாக்குறை ஏற்பட்டது. தங்கள் சொந்தப் பணத்தை எடுப்பதற்கு, மக்கள் பல நாள்கள் ஏ.டி.எம். வாசலில் நீண்ட வரிசைகளில் காத்துக்கிடந்தார்கள். சிலர் இதில் இறந்தும் போனார்கள். ஆனால் இந்த நடவடிக்கை மிகப்பெரிய தவறு என்று மோடி அரசு ஒப்புக்கொள்ளும் வாய்ப்பு குறைவு. கடந்த நவம்பரில் இருந்து சொல்லிவருவதைப் போலவே இதை நேர்மறையாகவே அது சித்திரிக்கும். இந்தியப் பண மதிப்பு நீக்க நடவடிக்கை சகஜமான அரசியல் பொருளியல் சூழ்நிலையில் கமுக்கமாகவும், திடீரென்றும் மேற்கொள்ளப்பட்டது. சர்வதேசப் பொருளியல் வரலாற்றில் முன்னெப்போதும் இப்படி நடந்ததில்லை. அதீத பணவீக்கம், போர், அரசியல் கிளர்ச்சி போன்ற தீவிரமான சூழ்நிலைகளிலேயே திடீர்ப் பண மதிப்ப நீக்க நடவடிக்கைகள் பிற சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன, என்கிறது சமீபத்திய இந்தியப் பொருளியல் கணக்காய்வு. பண மதிப்பு நீக்க நடவடிக்கை திட்டம் தோற்றுப் போனது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல தெரிந்த போதும் கூட பெரிதாக வெளிச்சம் போட்டுக் காட்டுவதோ பெரிய நிலையில் போராட்டமோ நிகழாத காரணத்தால், மோடி எதைச் செய்தாலும், அது தோல்வி அடைந்தது என்று வெளிப்பட்டாலும் கூட, பெரிதாக வெளிச்சம் போட்டுக் காட்டுவதோ, பெரிய நிலையில் போராட்டமோ நிகழ்ந்து விடக் கூடாது என்கிற நோக்கம்- வெற்றி பெறுவதற்கு பண மதிப்பு நீக்க நடவடிக்கை திட்டம் மிக அருமையாகப் பயன் பட்டது என்றால் அந்தத் திட்டத்தில் அதுதானே அவருடைய நோக்கமாக இருந்திருக்க முடியும். அனைத்து அதிகாரம் பெற்ற இந்தியத் தலைமை அமைச்சர் பதவி வகிப்பவர் மோடி. அவருக்கு எதிராக சட்டமோ, ஊடகங்களோ, எதிர்கட்சிகளோ, அறிஞர்களோ, போராட்டக் காரர்களோ கூட ஒரு சிறு துரும்பையோ கிள்ளிப் போட்டு விட முடியாது என்கிற அதிர்வை மக்களிடம் நிலை நிறுத்துவது. என்பது முதன்மையான நோக்கம். மோடியின் முதலாவது நோக்கம் வெற்றி அடைந்திருக்கிறது. இதற்கிடையில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி, ‘ஆப்ரேஷன் கிளீன் மணி’ என்ற பெயரில் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டது. இதன்மூலம் பணமதிப்பிழப்பு விவகாரத்திற்கு பின், அதிக அளவில் பணத்தை வங்கிகளில் முதலீடு செய்தவர்களைத் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளது. முறையாக தெரிவிக்கப்படாத ரூ.15,496 கோடி அளவிலான வருமானம் குறித்து தெரியவந்துள்ளது. அதில் ரூ.13,920 கோடி மதிப்பிலான ரூபாய் தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆப்ரேஷன் கிளீன் மணி என்ற பெயரில் உருவாக்கப்பட்ட முதல் கட்ட திட்டத்தின் மூலம், முறையாக வரி செலுத்தாத பட்டியலில் இருந்து 18 லட்சம் வழக்குகளை கண்டறிந்துள்ளன. இதையடுத்து ரூ.1 கோடி மதிப்பிலான பணப் பரிமாற்றம் செய்த 14,000 பேரை வருமான வரித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த வகையாக மோடியின் இரண்டாவது உள்நோக்கமான, 1.மொழி 2.குடும்பம் 3.வீடு 4.கல்வி 5.கலை 6.இலக்கியம் 7.தொழில் 8.கருவிகள் 9.உடை,அணிகலன் 10.உணவுகள் 11.வணிகம் 12.நாடு 13.அரசு 14.நீராதாரம் 15.கோயில் 16.அறங்கூற்று 17.நிதி 18.பாதுகாப்பு 19.பண்பாடு 20.வரலாறு ஆகிய உடைமைத் தளங்களில்- நடுவண் அரசில் மோடியை தக்கவைக்க உதவிக் கொண்டிருக்கும் கார்பரேட் முதலைகளுக்கு எதிராக வளர்ந்து கொண்டிருக்கும்- திறனாளர்களைக் கட்டம் கட்டுவதற்காக பட்டியல் இடுவது. என்கிற மோடியின் இரண்டாவது தலையாய நோக்கமும் வெற்றி பெற்று விட்டது. தொடர்ந்து, புதிய இந்தியா பிறந்து விட்டதாக மோடி அறிவித்த திட்டங்களான, ஆதார், சரக்கு மற்றும்சேவை வரி, உணவு பாதுகாப்பு திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் அனைத்தும், மோடியின் மேற்கண்ட இரண்டு உள்நோக்கங்களுக்கானதே. மோடியின் திட்டங்களில் அவரின் உள்நோக்கங்களுக்கு மகத்தான வெற்றியே. விடுதலை உணர்வோடு மக்களை அன்பு வழியில் முன்னெடுத்துச் செல்லும் நோக்கம் எதுவும் மோடிக்கு இல்லவே இல்லை.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



