Show all

பட்டையை கிளப்பியது இந்தியா: இரண்டாவது போட்டியிலும் அபார வெற்றி

இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா அபாரமாக வெற்றி பெற்றுள்ள நிலையில், இரண்டாவது போட்டி இன்று செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்றது. தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் டு பிளிசிஸ் மற்றும் பெலுக்வாயோவிற்குப் பதிலாக  டப்ரைஸ் ஷாம்சி மற்றும் கயா ஜோன்டா ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.  டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் தென் ஆப்ரிக்க அணி சார்பில் அம்லா மற்றும் டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 39 ரன்கள் சேர்த்த போதும் பின் வந்த அனைவரும் சொதப்பியதால் தென் ஆப்பிரிக்க அணி 32.2 ஓவர்களில் 118 ரன்னில் சுருண்டது. இந்திய அணி சார்பில் அபாரமாக பந்து வீசிய சாகல் 8.2 ஓவரில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 6 ஓவரில் 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். மேலும் புவனேஷ் குமார் மற்றும் பும்ரா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

அதன் பின் 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் தவான் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ரோஹித் சர்மா 15 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார். பிறகு தவானுடன் கேப்டன் விராத் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி 20.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 119ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. தவான் 51 ரன்களுடனும், கோலி 46 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இது தவானிற்கு 23-வது ஒருநாள் அரைசதம் ஆகும். இந்த வெற்றி மூலம் இந்திய அணி  6 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்று முன்னிலை வகிக்கிறது.

இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி வருகிற 7-ம் தேதி கேப்டவுனில் நடைபெற உள்ளது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.