இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒரு நாள் போட்டி நேற்று டர்பனில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியாக தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக டு பிளிசிஸ் 112 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் 120 ரன்கள் குவித்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணி தரப்பில் யாதவ் 3 விக்கெட்டுகளையும், சாகல் 2 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் புவனேஷ் குமார் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். அதையடுத்து 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் களமிறங்கினர். ரோகித் சர்மா 20 ரன்னுடனும் தவான் 35 ரன்னுடனும் விரைவாக ஆட்டமிழந்தனர். அதை தொடர்ந்து ரகானே மற்றும் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 189 ரன்கள் சேர்த்தது. ரகானே 79 ரன்கள் எடுத்தும் விராட் கோலி 112 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். இறுதியாக இந்திய அணி 45.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வெற்றி ரன்களை டோனி அடித்தார். இதன்மூலம் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி வருகிற 4-ம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற உள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



