20,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: ராஜஸ்தான் மாநிலத்தில் இரு மக்களவைத் தொகுதிகளுக்கும், ஒரு பேரவைத் தொகுதிக்கும் நடைபெற்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இது, அந்த மாநிலத்தில் ஆளும் பாஜகவுக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது. மேற்கு வங்கத்தில் ஒரு மக்களவைத் தொகுதிக்கும், ஒரு பேரவைத் தொகுதிக்கும் நடைபெற்ற இடைத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தானிலுள்ள அல்வர், அஜ்மீர் ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கும், மண்டல்கர் பேரவை தொகுதிக்கும் கடந்த திங்கள்கிழமை இடைத் தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அல்வர், அஜ்மீர் தொகுதிகளில் முறையே காங்கிரஸ் வேட்பாளர்கள் கரண் சிங் யாதவ், ராம் ஸ்வரூப் லம்பா ஆகியோர் வெற்றி பெற்றனர். மண்டல்கார் பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விவேக் தகாட், 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை தோற்கடித்தார். இத்தொகுதியில் பாஜக சட்டமன்ற உறுப்பினராக இருந்த கிர்தி குமாரி மரணமடைந்ததைத் தொடர்ந்து, இடைத் தேர்தல் நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. கடந்த மக்களவைத் தேர்தலில் ராஜஸ்தானில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றிருந்தது. தற்போது இரு தொகுதிகளை காங்கிரஸிடம் இழந்துள்ளது. 200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப் பேரவையில் பாஜகவுக்கு 161 உறுப்பினர்கள் உள்ளனர். அந்த மாநிலத்தில் நிகழாண்டின் இறுதியில் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மேற்கு வங்கத்தில் உலுபேரியா மக்களவைத் தொகுதிக்கும், நோவாபரா பேரவைத் தொகுதிக்கும் நடைபெற்ற இடைத் தேர்தலில், இரண்டிலும் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,686
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.