2018 ஆம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி நேற்று இரவு இந்திய நேரப்படி 8.30 மணிக்கு ஆட்டம் தொடங்கியது. இப்போட்டியில் பிரான்சும் குரோஷியாவும் மோதியது, மேலும் குரோஷியாவிற்கு இது தான் முதல் உலக கோப்பை இறுதிப்போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டம் தொடங்கி 18-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கிரிஸ்மான் மீது குரோஷியாவின் புரோஜோவிச் மோதியதால் பிரான்ஸ் அணிக்கு ஃபிரிகிக் வாய்ப்பு வழங்கப்பட்டது. பிரான்ஸ் வீரர் கிரிஸ்மான் அடித்த பந்தை குரோஷியாவின் மரியோ மான்ட்ஜூகிக் தடுக்க நினைத்து தலையால் முட்ட அது துரதிர்ஷ்டவசமாக சுய கோலாக மாறியது. உலக கோப்பை வரலாற்றில் இறுதிப்போட்டியில் தனது அணிக்கு எதிராக கோல் அடித்த முதல் வீரர் குரோஷியாவின் மண்ட்ஜூகிக் என்பது குறிப்பிடத்தக்கது. 28-வது நிமிடத்தில் குரோஷியாவுக்கு ‘ஃபிரிகிக்’ வாய்ப்பு கிடைக்க, அதை சிறப்பாக கோலாக மாற்றியது குரோஷியா அணி. இதையடுத்து ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமனுக்கு வந்தது. 38-வது நிமிடத்தில் குரோஷியாவின் இவான் பெரிசிச் எதிர்பாராத விதமாக கையால் தடுத்ததால் பிரான்ஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை பிரான்சின் கிரிஸ்மான் எளிதில் கோலாக்கினார். அதை தொடர்ந்து 59-வது நிமிடத்தில் பால் போக்பாவும், 65-வது நிமிடத்தில் கைலியன் பாப்பேவும் கோல் அடித்ததால் பிரான்ஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இறுதியில் 69-வது நிமிடத்தில் குரோஷியாவின் மான்ட்ஜூகிச் ஆறுதல் கோல் ஒன்றை அடித்தார். முடிவில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதற்கு முன்பு 1998-ம் ஆண்டு பிரான்ஸ் அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு ரூ.255 கோடியும், 2-வது இடம் பிடித்த குரோஷியாவுக்கு ரூ.188 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



