Show all

பாதுகாப்பு இல்லையா! வங்கியில் ரூ.5 லட்சத்துக்கு மேலான வைப்புகளுக்கு

வாராக் கடன் சிக்கலை ஐந்தாவது வங்கியாக எதிர்கொண்டுள்ள இலட்சுமி வங்கியால் வைப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதில் ரூ.5 லட்சத்துக்கு மேல் வைப்பு செய்தால் அந்தப் பணத்திற்கு பாதுகாப்பில்லை என்பதான செய்தியும் பேசுபொருளாகியுள்ளது.

08,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: வாராக் கடன் சிக்கலை ஐந்தாவது வங்கியாக எதிர்கொண்டுள்ள இலட்சுமி வங்கியால் வைப்பாளர்கள் அதிர்ச்;;சி அடைந்துள்ளனர்.

வாராக் கடன் சிக்கல் என்பது இந்திய வங்கிகள் நீண்ட காலமாகவே சந்தித்து வரும் பெரும் சிக்கலாகவே இருந்து வருகிறது. வங்கிகளில் கடன் வாங்கிவிட்டுத் திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டே தப்பியோடுவதும், போலியான ஆவணங்களைக் கொண்டு கடன் வாங்கி மோசடி செய்வதும் அண்மைக் காலங்களில் பெரும் வாடிக்கையாகிவிட்டது. இந்தச் சிக்கல்களைச் சமாளிக்க முடியாத வங்கிகள் சில திவால் நிலைக்குச் சென்றுவிட்டன. இதனால் அவ்வங்கிகளில் வைப்பு செய்த வாடிக்கையாளர்களின் பணத்துக்கும் ஆபத்து ஏற்பட்டது. இதுபோன்ற சிக்கல்களால் வங்கிகளில் வைப்பு செய்யவே தயக்கம் காட்டுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது.

ஒரு வங்கி திவால் நிலைக்குச் செல்லும்போது அந்த வங்கியில் வைப்பு செய்துள்ளவர்களின் பணத்துக்குக் குறிப்பிட்ட அளவில் காப்பீடு வழங்கப்படுகிறது. அதேபோல, திவால் நிலைக்குச் செல்லும் வங்கியை வைப்புப் பணத்தை வைத்து மீட்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் வங்கிகளில் வைப்பு  செய்வோரின் பணம் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் வங்கிகள் பக்கமும் நிலவுகிறது. 

கடந்த 30 மாதங்களில் மட்டும் லட்சுமி விலாஸ் வங்கியுடன் சேர்த்து மொத்தம் ஐந்து வங்கிகள் இதுபோன்ற சிக்கலுக்குள் சிக்கியுள்ளன. 

தமிழகத்தைச் சேர்ந்த இந்த லட்சுமி விலாஸ் வங்கியை ஒன்றியக் கட்டுப்பாட்டு வங்கி முழுவதுமாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துள்ளது. சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்குக் கடன் வழங்கிக் கொண்டிருந்த இவ்வங்கி பெரு நிறுவனங்கள் துறைக்கும் கடன் வழங்கி வாராக் கடன் சிக்கலில் சிக்கியதாகச் சொல்லப்படுகிறது. 

லட்சுமி விலாஸ் வங்கியில் பணம் போட்டவர்களுக்கு சில நாட்களுக்கு முன்னர் ஒன்றிய அரசு கட்டுப்பாடு விதித்திருந்தது. அதாவது, லட்சுமி விலாஸ் வங்கியில் வைப்பு செய்தவர்கள் ஒரு மாதத்துக்கு அதிகபட்சமாக ரூ.25,000 மட்டுமே பணம் எடுக்க முடியும் என அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டது. 

இதனால் இவ்வங்கியில் வைப்பு செய்தவர்கள் நடுவே அச்சம் ஏற்பட்டுள்ளது. தங்களது பணம் அனைத்தும் இல்லாமல் போய்விடுமோ என்று வைப்பு செய்தவர்கள் அஞ்சுகின்றனர். எனினும், லட்சுமி விலாஸ் வங்கியில் முதலீடு செய்தவர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கிறது என்ற உத்தரவாதத்தை வழங்குவதாக அந்த வங்கியின் நிர்வாகி டி.என். மனோகரன் தெரிவித்துள்ளார்.

லட்சுமி விலாஸ் வங்கியில் கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் வைப்பு செய்துள்ளனர். அவர்களின் வைப்பு பணம் மட்டும் கிட்டத்தட்ட ரூ.6,100 கோடி. ஒருவேளை வங்கி திவால் ஆகிவிட்டால் அதில் வைப்பு செய்தவர்களுக்குக் காப்பீடு கிடைக்கும். ஆனால் கட்டுப்பாட்டு வங்கியின் விதிமுறைப்படி, ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரையில் மட்டுமே காப்பீடு வழங்கப்படும். 

இதற்கு முன்னர் அதை விடக் குறைவாக ரூ.1 லட்சம் மட்டுமே காப்பீடு இருந்தது. மும்பையைச் சேர்ந்த பிஎம்சி வங்கியில் சிக்கல் ஏற்பட்ட பிறகுதான் காப்பீட்டுத் தொகை உயர்த்தப்பட்டது. எனவே ஒரு வங்கியில் மொத்தமாக ரூ.5 லட்சத்துக்கு மேல் வைப்பு செய்வது ஆபத்துதான். அதற்கு மாற்றாக வெவ்வேறு வங்கிகளில் பிரித்து வைப்பு செய்து வைக்கலாம். ஆனாலும் ஒருவரின் அனைத்து வங்கிக் கணக்கும் ஒரே ஆதார் எண்ணில் இணைக்கப்படுவதால், அந்த வகைக்கும் ஆபத்து நேரலாம் என்றும் சொல்லப்படுகிறது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஒருவர் ஒரு நாளைக்கு 2000 மட்டுமே எடுக்கலாம் என்ற கட்டுப்பாடு இருந்த போது, தங்களின் இரண்டாவது மூன்றாவது வங்கிக் கணக்கில் இருந்து 2000 தொகை எடுக்கமுடியாமல் இருந்தது நினைவு கூறத்தக்கது. 

ஆகமொத்தம் நிலையான ஆட்சி என்று ஆசைப்பட்டு நிலையில்லாத சட்டங்களுக்கு ஆளாகி, இந்திய மக்கள் அல்லாடும் அவலம், துறை சார்ந்த அறிவாளர்கள் இல்லாத, துறை சார்ந்த அறிவாளர்களை மதிக்காத பாஜக ஆட்சி தொடரும் வரை நீடிக்கும் என்பதாக சமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.