ஓட்டா? பகடி பண்ணாதீங்க என்கிறார், பார்வையாளர்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி வழங்கும் வாக்குரிமை குறித்து, நடிகை கஸ்தூரி. அதுமட்டுமல்லாமல் விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியை அக்குவேறு ஆணி வேறாக பிரித்து மேய்கிறார் நடிகை கஸ்தூரி 08,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் ஓட்டுக்களுக்கு மதிப்பே இல்லை என்பதை நடிகை கஸ்தூரி வெட்ட வெளிச்சமாக்கி உள்ளார். கடந்த பிக் பாஸ் தமிழ் பருவம் மூன்றில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி இப்படி ஒரு கீச்சின் மூலம் சமூக வலைதளங்களில் பரபரப்பை கிளப்பி உள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியை 4 கோடி பேர் பார்க்கிறாங்கன்னு பெருமைய சொல்ல வேண்டியது. ஒருத்தருக்கு 50 ஓட்டுக்கள் கொடுக்க வேண்டியது. ஆனால், அந்த ஓட்டுக்களை கொஞ்சமும் மதிக்காமல், தங்கள் நோக்கத்திற்கு போட்டியாளர்களை வெளியே அனுப்பி வருகின்றனர். அந்த நிகழ்ச்சியின் பால் மக்களை ஈர்க்கவே இப்படி ஒரு ஓட்டு தந்திரம். நடிகை கஸ்தூரியிடம் அவரின் கொண்டாடி ஒருவர், வெளியேற்றம் ஓட்டுக்களின் அடிப்படையில் நடக்கிறதா? இல்லை விஜய் தொலைக்காட்சி விருப்பத்திற்கு வெளியேற்றுகிறதா என கேட்டதற்கு, மலுப்பாமல் பதில் அளித்த கஸ்தூரி, ஓட்டா? பகடி பண்ணாதீங்க என்றார். மேலும், இறுதிச்சுற்றுக்கு விஜய் தொலைக்கட்சியின் கலைஞர்கள் இருவர் செல்வார்கள் என்றும், வெளியே இருந்து வந்த ஒரு இளம் போட்டியாளர் செல்வார் என்றும் கூறினார். விஜய் தொலைக்காட்சியின் தயாரிப்புகள்தாம் இறுதிச்சுற்றுக்குச் செல்வார்கள். அவர்களில், ஒருவருக்குத் தான் தலைப்பு கொடுக்கப்படும் என்பதை இப்போதே கஸ்தூரி பகிரங்கமாக போட்டு உடைத்து விட்டார். ரியோ ராஜையும், இரம்யா பாண்டியனையும் தாம் மிகவும் விஜய் தொலைக்காட்சியினர் முன்னெடுத்து வருகின்றனர் என்றும் இறுதி சுற்றுக்கு யார் என்பதை தெளிவுபடுத்தி விட்டார். பாலாஜிக்கு தர்சன் நிலை தான். ஆரி, அனிதா, சனம் செட்டி, சம்யுக்தா, நிஷா, அர்ச்சனா, கேபி, ஆஜீத், சிவானி மற்றும் சோமசேகர் என எல்லோரையும் அடுத்துடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தூக்குவார்கள். பாலாஜி முருகதாஸை கடைசி வரைக்கும் இலக்கு அளவீட்டுப் புள்ளிகளுக்காக (டிஆர்பி) கொண்டு சென்று, தர்சனை கழட்டி விட்டது போல கழட்டி விட்டு விடுவார்கள் என்றும் வெளுத்து வாங்கி உள்ளார். இந்த பிக் பாஸ் தமிழ் பருவம் நான்கில் தனக்கு பிடித்த போட்டியாளர்கள் என்றால் அது கேபிரில்லா மற்றும் சோமசேகர் தான் என்றும் கஸ்தூரி தனது கருத்தை பதிவு செய்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு ஒரு ஆண்டு ஆகியும் சம்பளம் கொடுக்கவில்லை என கஸ்தூரி விஜய் தொலைக்காட்சி மீது ஒரு குற்றச்சாட்டை முன்னெடுத்திருந்த அடிப்படையில்- பாக்கி சம்பளம் வாங்கிட்டீங்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, அசல் கொடுத்துட்டாங்க என்று தெரிவித்துள்ளார். இப்படி கள்ளம் கபடம் இல்லாமல் நடிகை கஸ்தூரி அழகாக செதுக்கும் ஆப்பு- விஜய் தொலைக்கட்சியோடு பிக்பாஸ் நிகழ்ச்சியை- கட்சியை வளர்க்கலாம் என்கிற நம்பிக்கையோடு தொகுத்து வழங்கும் கமல் மீதும் எதிர்வினை ஆற்றும் என்பதை நடிகை கஸ்தூரி புரிந்து கொள்ள வேண்டும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



