Show all

கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப் பட்ட பழுதால் நிறுத்தப் பட்டது! 978 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட சந்திரயான் 2

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இறுதி நேரத்தில் நிறுத்தப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் விரைவில் வேறொரு நாளில் விண்ணில் செலுத்தப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

30,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நிலவின் தென்துருவப் பகுதியை ஆராய சந்திரயான் 2 விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் திட்டமிட்டு இருந்தது. அதன்படி ஆந்திரா மாநிலம் அரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று அதிகாலை 2.51 மணிக்கு சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டது. 

978 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தை பாகுபலி என்று அழைக்கப்படும் மார்க் 3 ஏவுகணை மூலம் விண்ணில் செலுத்துவதற்கான இறங்குமுக நேரக் கணிப்பு நேற்று காலை 6.51 மணிக்குத் தொடங்கியது. 

சந்திரயான் விண்கலம் விண்ணில் ஏவப்படுவதை நேரடியாக காண்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழகம், ஆந்திரா ஆளுநர்கள், ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டோர் ஆராய்ச்சி மையத்தில் எதிர்பார்ப்புகளுடன் திரண்டிருந்தனர். 

இன்று அதிகாலை 2.51 மணிக்கு சந்திரயான் விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 56 நிமிடங்கள் முன்னதாக, அதாவது 1.55 மணியளவில் இறங்குமுக நேரக்கணிப்பு திடீரென நிறுத்தப்பட்டது. 

இறுதி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஏவுகணையில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சந்திரயான் 2 விண்களம் நிறுத்தப்படுவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் சந்திரயான் 2 விண்கலம் விரைவில் வேறொரு நாளில் ஏவப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. 

ஆய்வுகள், கடைசி நேரத்தில் திடீரென எதிர்பார்ப்புகளை நிறைவு செய்ய முடியாமல் போவதெல்லாம் இயல்பானதுதான். ஆனால் அந்த ஆய்வுகளை மேற்கொள்வதற்கு முன்னால் வானாளவ எதிர்பார்ப்புகளை அரசியல்வாதிகளும், ஊடகங்களும் மக்களிடம் விதைப்பதுதான் பிழையானது. நியூட்ரினோவும் இவ்வாறனதுதான். இது 978 கோடியில் தயாரிக்கப் பட்ட ஒரு வண்டி; தப்பிதத்தால் தவறு இல்லை. நடுவண் அரசு பீற்றிக் கொண்டிருக்கிற நியூட்ரினோ ஆய்வு மையம் ஒரு கட்டுமானம்; பயனற்று பாழடைந்து போக நிறையவே வாய்ப்பு உண்டு. கோலார் தங்கச் சுரங்கம் போல. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,214.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.