நடுவண் பாஜக அரசு ஆட்சியேற்ற நாளிலிருந்தே, ஹிந்தி திணிப்பு முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், சரியான பதிலடியாக நாம் தமிழில் உறுதிமொழி படித்து பதவியேற்போம் என்று திமுக தெளிவாக திட்டமிட்டு காய் நகர்த்தியது. அதற்கு கிடைத்த பாஜகவினரின் எதிர்வினையாற்றலும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் முயற்சிக்கே உரமாகிப் போனது. 06,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ்வாழ்க, தமிழில் உறுதிமொழி படித்து பதவியேற்பு உலக அளவில் தலைப்பானது எப்படி! திட்டமிடப்பபட்டதா? ஆம் என்கின்றனர் திமுகவினர். இந்திய மக்களாட்சி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, நாடாளுமன்றப் பதவியேற்பு தாய்மொழிக்கு கிடைத்த வெற்றியாக நடந்து முடிந்தது. அதே சமயம் பாஜகவினரின் எதிர் வினையாற்றல், அவர்கள் தம்மின் போலி தேசியவாதத்ததைத் தோலுரித்துக் காட்டியது. ஆதிக்கவாதத்தை தேசியவாதம் என்று முழக்கும் ஆரவாரத்தை அம்பலப்படுத்தியது. காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றபோது பாரதிய ஜனதா பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என உரக்க முழக்கம் எழுப்பினார்கள். சோனியா காந்தி பதவியேற்றபோது அவர் அந்நிய நாட்டைச் சேர்ந்தவர் என்பதன் குறியீடாக பாரத் மாதா கீ ஜே! என முழக்கம் எழுப்பினர். அசாதுதீன் ஒவைஸி பதவியேற்க வந்தபோது, அவருக்கு இஸ்லாமிய எதிர்ப்பை பதிவு செய்யும் நோக்கமாக ஜெய் ஸ்ரீ ராம் என உரக்க முழக்கம் எழுப்பப்பட்டது. சாக்ஷி மஹராஜ் பதவி ஏற்று முடித்ததும், பாரதிய ஜனதா பாராளுமன்ற உறுப்பினர்கள்; சிலர், மந்திர் வஹான் பனாயேங்கே (ராமர் கோயில் அந்த இடத்திலேயே நிறுவப்படும்) எனக் முழக்கம் எழுப்பினார்கள். இதற்கிடையே பதவியேற்றுக்கொண்ட 37 தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் (ரவீந்திரநாத் குமார் தவிர) ஒரே மாதிரியாகத் தமிழில் உறுதிமொழி கூறி பதவியேற்றுக்கொண்டார்கள். தமிழில் பதவியேற்கும் யோசனையை முகநூலில் பதிவுசெய்து தொடங்கிவைத்தது விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார்தான். 37 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையாகத் தமிழில் பதவியேற்றது புது நம்பிக்கையை அளித்திருக்கிறது. பதவியேற்புக்கு முதல்நாள் முகநூலில், தமிழில் பதவி ஏற்போம் எனப் பதிவு செய்திருக்கிறார் பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார். அதைப் பார்த்துவிட்டு கனிமொழி அப்படியே செய்வோம் எனச் செய்தியனுப்பியுள்ளார். ஆங்கிலத்தில் பதவியேற்பதாக இருந்த தமிழக காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த யோசனையை வரவேற்றார்கள். தயாநிதி மாறன்தான் தமிழில் உறுதிமொழி ஏற்றபிறகு தமிழ் வாழ்க! என முழக்கமிடுவோம் என்று யோசனை கொடுத்தார். ஹிந்தி திணிப்புச் சூழலுக்கு நடுவே அவர் கொடுத்த யோசனை கச்சிதமாக இருந்ததால், எல்லோரும் உறுதிமொழிக்குப் பிறகு தமிழ் வாழ்க என்று முழங்கி ஒருமித்த குரலாக ஒலித்து தமிழர் நிலைப்பாட்டை உணர்த்தியிருக்கிறார்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,190.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



