Show all

எடியூரப்பா, முதலமைச்சர் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்தார்! நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பாகவே

05,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 104 இடங்களில் வெற்றிபெற்ற பாஜகவுக்கு, பெரும்பான்மை இல்லாத நிலையிலும் ஆட்சியமைக்க ஆளுநர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்து பெருங்குழப்பத்தை விளைவித்தார். 

இதையடுத்து, கர்நாடகாவின் 23 வது முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றுக்கொண்டவர், உச்ச அறங்கூற்றுமன்றத்தின் உத்தரவுப் படி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை இன்று நிரூபிக்க வேண்டியிருந்தது. இதையடுத்து, கர்நாடக சட்டப்பேரவை இன்று கூடியது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பாகப் பேரவையில் உருக்கமாகப் பேசிய எடியூரப்பா, முதலமைச்சர் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்தார். ஆளுநர் வஜுபாய் வாலாவைச் சந்தித்து, அவர் தனது விலகல் கடிதத்தைக் கொடுத்தார். 

இந்த நிலையில், ஆளுநரைச் சந்தித்து காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியினர் ஆட்சியமைக்க உரிமை கோருவார்கள் என்று தெரிகிறது. அந்தக் கட்சிகளிடையே ஏற்கெனவே செய்யப்பட்டுள்ள உடன்படிக்கையின்படி, மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி, கர்நாடக முதலமைச்சராகப் பதவியேற்பார். அதேபோல, இரு கட்சிகளிலிருந்தும் தலா 14 அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்று கூறப்படுகிறது. அதேபோல, துணை முதலமைச்சர் பதவிகுறித்து அந்தக் கட்சிகள் இதுவரை முடிவுசெய்யவில்லை. எடியூரப்பா விலகலைத் தெடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத், இதன்மூலம் சட்டம், மக்களாட்சித் தத்துவத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. கர்நாடக அரசியல் விவகாரத்தை அறங்கூற்றுத்துறை சிறப்பாகக் கையாண்டது என்று தெரிவித்தார். எடியூரப்பா பதவி விலகியது குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.  

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,792. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.