நிவாரணம் இல்லாத நடுவண் அரசின் அதிகார ஊரடங்கு நீட்டிப்புக்கு எதிர்ப்பு. மும்பையில் போராடிய பிற மாநில தொழிலாளர்கள் மீது காவல்துறை தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு. 02,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: “ஊரடங்கு வேணாம், ஊருக்கு போறோம்” அதிர வைத்த தொழிலாளர்கள்! ஊரடங்கினை நீட்டித்த அன்றே ஊரடங்கினை தொழிலாளர்கள் உடைத்து கொண்டு வெளியே வந்ததும், சமூக விலகல் குறித்து துளிகூட அச்சமின்றி மும்பை பந்தராவில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. ஊரடங்கு நேற்று நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதுமே கடுமையான அதிருப்தியை அடைந்தனர் (கடந்த மூன்று கிழமையாக சோறு தண்ணீர் வருமானம் இல்லாமல் தவிந்திருந்த) மும்பையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள். ஊரடங்கு உத்தரவு நேற்றோடு முடிவடையும் நிலையில் அவரவர் சொந்த ஊர்களுக்கு போகலாம் என்று நினைத்து வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் மும்பை பாந்த்ரா தொடர்வண்டி நிலையத்தில் திரண்டனர். நாங்கள் நடுவண் அரசின் அறிவிப்பின் பேரில்தானே முன்பதிவு செய்திருந்தோம் என்றார்கள் பலர். ஆவேசம் ஆத்திரமடைந்த வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஊரடங்கு வேண்டாம், ஊருக்கு போகிறோம். எங்களுக்கு கட்டாயத்தேவைப் பொருட்கள் எதுவும் கிடைப்பதில்லை. இனியும் இங்கே இருக்க முடியாது என்று கண்ணீருடன் புலம்பல்களை முன்வைத்தனர். இவர்களில் பெரும்பாலானோர் உத்திரப்பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த 3 கிழமைகளாக வேலை எதுவும் இல்லாத நிலையில், ஒரு நாளைக்கு 2 வேளை சாப்பாடு கூட தங்களுக்கு சரியாக கிடைப்பதில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். இப்படி சமூக விலகலை கடைபிடிக்காமல் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் உயர் காவல்துறை அதிகாரிகளே அதிர்ந்து போயினர். சமாதான கலந்துரையாடல் நடத்தினர். தேவையான அடிப்படை பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என்றும் உறுதியளித்தனர். ஆனால், ‘ஊரடங்கு வேண்டாம், உழைக்கவிடு’ குடும்ப அட்டை பொருட்கள் வேண்டும், குடும்ப அட்டை பொருட்கள் வேண்டும் என்பதான அவர்களின் நீண்ட நேரம் முழக்கமாக ஒலித்து கொண்டே இருந்தததே தவிர அதிகாரிகள் பேசுவது எதுவுமே அவர்கள் காதில் விழவில்லை. உறவுகளை பிரிந்து தவிக்கும் வலியும், பசியின் உச்சமும், நாளைய எதிர்கால தவிப்பும்தான் தொழிலாளர்களுக்கு இப்போது மேலோங்கி உள்ளது. மும்பையில் சமூக இடைவெளி இல்லாமல் தொழிலாளர்கள் ஒரே இடத்தில் கூடியதால் நோய் தொற்றை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இப்போதைக்கு நாட்டிலேயே மஹாராஷ்டிராவில்தான் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் 3000 திற்கும் மேல் உள்ளனர். அதிலும் மும்பை தான் முதன்மை நகரமாகவே உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் வெளி மாநில தொழிலாளர்களின் போராட்டம் மாநில மக்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பரவும் என்பதால் ஊரடங்கை அறிவித்த அரசு, இப்போது ஆயிரக்கணக்கானோரை ஒரே இடத்தில் குழுமச் செய்தது அரசின் பெரும் தோல்வியாகவும் ஒரு சாராரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்தத் தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய காணொளிக் காட்சிகளும் வெளியாகி உள்ளன. ஒருவருக்கொருவர் நெருக்கி தள்ளி முண்டியடித்து கொண்டுதான் திரண்டு உள்ளனர். கொரோனா என்பது நம் மாநிலத்தை முதன்மையாக பீடித்துள்ளதே என்ற கவலை, பயம், பீதி, எதுவுமே அவர்களிடம் தென்படவில்லை. அவர்களின் முகங்களில் பசியின் கோரத்தாண்டவத்தை காண முடிகிறது. இயலாமையின் தவிப்பை உணர முடிகிறது. திரண்ட தொழிலாளர்கள் கூட்டத்தில் ஒருத்தருக்கு தொற்று இருந்தாலும்கூட, நாட்டின் நிலைமை இன்னும் மோசமாகும், சிக்கலாகும் என்று பலரும் அச்சம் தெரிவித்து வருகின்றனர். இதேபோல சூரத்திலும், 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வீதிக்கு வந்தனர். கடந்த 3 கிழமையாக வேலை இழந்த தொழிலாளர்கள் அங்கேயே சிக்கி கொண்டுள்ளதால், ‘எங்களை ஊர்களுக்கு அனுப்புங்கள்’ என்று அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து தெருவில் முழக்கமிட்டு குவிந்தனர். இப்போது ஊரடங்கை, நிவாரணம் ஏதும் இல்லாமல் நீட்டித்த நிலையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு மும்பை, சூரத்தில் போராடி உள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



