Show all

உலக நாடுகள் எதுவும் சந்தித்திராத உச்சம்! இந்தியாவில் ஒரே நாளில் 4.01 லட்சம் பேருக்கு கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 4.01 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

18,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியா முழுவதும் கொரோனாவின் 2வது அலையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், நாள்தோறும் கொரோனா பாதிப்புகள் உச்சமடைந்து வருகின்றன.  ஒரே நாளில் 3,86,452 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது என ஒன்றிய நலங்கு அமைச்சகம் முந்தாநாள் காலை தெரிவித்து இருந்தது.  இதனால், தொடர்ந்து 9-வது நாளாக 3 லட்சத்திற்கும் கூடுதலான பாதிப்புகளை இந்தியா சந்தித்தது.

இந்நிலையில், இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்புகள் 4 லட்சம் எண்ணிக்கையை நேற்று கடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  இதுபற்றி ஒன்றிய நலங்கு அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்து ஓராயிரத்து 993 பேர்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.  இதனால் மொத்த கொரோனா பாதிப்பு ஒரு கோடியே 91 லட்சத்து 64 ஆயிரத்து 969 ஆக உயர்வடைந்து உள்ளது.  நாட்டில் 3,523 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,11,853 ஆக உயர்ந்து உள்ளது.  கடந்த 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 99 ஆயிரத்து 988 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.   

இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியே 56 லட்சத்து 84 ஆயிரத்து 406 ஆக உயர்வடைந்து உள்ளது.  இதுவரை மொத்தம் 32,68,710 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.  நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 15 கோடியே 49 லட்சத்து 89 ஆயிரத்து 635 ஆக உள்ளது என்று தெரிவித்து உள்ளது.  

இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையின் அடிப்படையில், ஒன்றிய நலங்குத்துறை தெரிவித்துள்ள கணக்குப்படி இந்தியாவில் தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை பதினோரு விழுக்காடு ஆகும். ஓராண்டுக்கு மேலாக கொரோனா பாதிப்பில் இருந்து வரும் இந்தியாவில், தடுப்பூசி செலுத்தப்பட்ட விழுக்காடு மிக குறைவானதும், கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒன்றிய பாஜக அரசின் பொறுப்பற்ற தன்மையும் ஆகும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.