Show all

இன்று இந்தியப் பொருளாதாரம் மற்றும் மக்களாட்சியின் கறுப்பு நாள்: எதிர்கட்சிகள்

22,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நீக்க நடவடிக்கையானது இந்தியப் பொருளாதாரம் மற்றும் மக்களாட்சியின், கறுப்பு நாள்! என முன்னாள் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார். 23,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5118 அன்று (08.11.2016) பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மோடி அறிவித்தார். பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் இந்தியப் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதன் பொருட்டு- திமுக, விடுதலைச்சிறுத்தைகள், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆங்கில தேதி அடிப்படையில் இன்றைய நாளை கறுப்பு நாளாக அனுசரிக்க முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், பணமதிப்பு நீக்கம் குறித்து நேற்று அகமதாபாத்தில் வணிகர்கள் மத்தியில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,

பணமதிப்பு நீக்க நடவடிக்கையானது இந்தியப் பொருளாதாரம் மற்றும் ஜனநாயகத்தின் கறுப்பு நாள். இந்த உலகில் எந்த ஒரு ஜனநாயக நாடும் இத்தகைய நிர்பந்தத்தை திணித்ததில்லை.

மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசினால் எடுக்கப்பட்டுள்ள பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரிலான முயற்சிகள் அனைத்தும் சீனாவுக்கே சாதகமாக அமைந்துள்ளன. ஏனெனில், சீனாவின் ஏற்றுமதி இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

குஜராத் மாநிலத்தின் சூரத், வாபி, மோர்பி போன்ற வர்த்தக மையங்கள் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

சரக்கு சேவை வரி இப்பகுதிகளை இன்னமும் மோசமான நிலைமைக்கு தள்ளியிருக்கிறது. குஜராத் போன்ற மாநிலங்களில், பணமதிப்பு நீக்கமும் சரக்கு சேவை வரியும் சிறு வணிகங்களின் முதுகெலும்பை நொறுக்கியுள்ளது. உள்நாட்டில் தொழில்முனைவோர் மனங்களில் சரக்கு சேவை வரி தீவிரவாதமாகவே பதிந்துள்ளது.

நான் ஏற்கெனவே மேலவையில்; கூறியதை இங்கே மீண்டும் வலியுறுத்துகிறேன், பணமதிப்பு நீக்க நடவடிக்கை திட்டமிட்ட திருட்டு; சட்டபூர்வ கொள்ளை

இவ்வாறு அவர் பேசினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,600

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.