Show all

தொழிலில் தோற்றவனை எல்லாம் குற்றவாளியாக்கப் பயன்பட்ட பணமதிப்பு நீக்கம்

22,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஒரு தனி மனிதன் தொழில் தொடங்கி, நடத்தி வெற்றி பெறுவது என்பது மிக மிக கடுமையான செயலாகும்.

தமிழகத்தின் 80விழுக்காடு மக்களில் ஒவ்வொருவரும் தொழில் தொடங்க முயற்சித்து தங்கள் குடும்பத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் அளவிற்கு வருமானம் பெற இயலாமல், கைக்காசை கொஞ்சம் இழந்து, ஏதோ ஒரு வேலையில் இணைந்து சொற்ப வருமானத்தில் அப்பாடா என்று சிக்கன வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.

அப்படியான முயற்சியில் பலருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்கு இருக்கும்.

பல்வேறு படிப்புக்கான சான்றிதழ் இருக்கும்.

பல்வேறு அரசு உரிமங்கள் இருக்கும்.

சிலர் சிறுதொழில் நடத்துவதற்கான அரசு பதிவுச் சான்றிதழ் பெற்றிருப்பார்கள்.

சிலர் நிறுவனம் நடத்துவதற்கான அரசு சான்றிதழ் பெற்றிருப்பார்கள்.

சிலர் தனியார் நிறுவனங்களில் அங்கிகாரம் இல்லாத மருத்துவப் படிப்புகளுக்கான சான்றிதழ் பெற்றிருப்பார்கள்.

இப்படி இழந்த நேரம், பொருள் அனைத்தையும் அனுபவ கல்வியாக எடுத்துக் கொள்வார்களே யொழிய அதை ஒரு குற்றமாகவோ, அதற்கு அரசோ மற்ற யாரோ காரணம் என்றோ எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

இப்படி நமக்கு முந்தைய தலைமுறை இழந்த நேரம், பொருள், நிம்மதி ஆகியவற்றைக் கணக்கிடவே முடியாது.

ஆனால் அடுத்த தலைமுறையில் அவர்கள் சந்ததிகளுக்கு பாடமாக அமையும்.

இப்படித்தான் நமது மக்கள் சமுதாயம் பல பல ஆயிரம் ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

இந்த மக்கள் சமுதாயம்-

இழந்தவைகளையெல்லாம் குற்றச்செயல் என்று பட்டியல் இட்டு, ‘குப்புறத் தள்ளிய குதிரை குழியும் பறித்த கதையாகசாதனை என்ற பீற்றிக் கொண்டிருக்கிறது மோடி அரசு.

அந்த வகையில் தான்-

பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகான காலகட்டத்தில் செயல்படாத 35,000 நிறுவனங்களில் வங்கி கணக்கில் ரூ.17,000 கோடி வைப்பு செய்யப்பட்டிருக்கிறது. என்கிற நடுவண் மோடி அரசின் கேணத்தனமான கண்டுபிடிப்பு-

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்படாமல் இருந்து கொண்டு நிதி சார்ந்த விவரங்களை அறிவிக்காமல் இருக்கும் 2.24 லட்சம் நிறுவனங்களின் பெயர்களை அரசுப் பதிவேட்டில் இருந்து நடுவண் அரசு நீக்கம் செய்துள்ளதாம். இயக்க முடியாத நிறுவனங்களை, கடன்சுமை ஏறிய நிறுவனங்களை,

ஷெல் நிறுவனங்கள் அல்லது போலி நிறுவனங்கள் என்றால் எந்த ஒரு வர்த்தகமும் தொழிலும் நடக்காமல் நிதிமுறைகேடுகள் செய்வதற்கென்றே தொடங்கப்பட்ட நிறுவனங்களாகும். இத்தகைய நிறுவனங்களின் வலைப்பின்னலை உடைத்து கறுப்புப் பணம், நிதி முறைகேடு, அன்னியச் செலாவணி மோசடி ஆகியவற்றைத் தடுப்பதுதான் நோக்கம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஷெல் நிறுவனங்கள் ஷெல் கம்பெனிகள் என்று அழைக்கப்படும் நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 1.06 லட்சம் இயக்குநர்கள் தகுதி நீக்கத்துக்காக கடந்த செப்டம்பர் மாதம் நடுவண் அரசின் கார்ப்பரேட் விவகார அமைச்சகம் அடையாளம் கண்டது. இதில் கேரளாவைச் சேர்ந்த பல தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், முன்னணி அரசு ஊழியர்கள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இவ்வாறு போலி நிறுவனங்களைத் தொடங்கி அதில் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டதில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இயக்குநர்கள் பட்டியலில் டெல்லிக்கு முதலிடம், இங்கிருந்து 74,920 இயக்குநர்கள் அடையாளம் காணப்பட்டு செப்டம்பரில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் 24,048, மும்பையில் 68,851, ஹைதராபாத்தில் 41,156, எர்ணாக்குளத்தில் 14,000, கட்டாக்கில் 13,383, அகமதாபாத்தில் 12,692 என்று தகுதி நீக்கத்திற்காக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நிதி சார்ந்த அறிக்கைகளை ஆய்வு செய்யவும், கணக்குகளுக்கான தரநிலைகளை வகுக்கவும், தவறிழைக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் தேசிய நிதி அறிவிப்பு ஆணையத்தை உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சட்டப்படியான கட்டுப்பாடு இரண்டு ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் வரை செயல்படாமல் இருக்கும் 2.24 லட்சம் நிறுவனங்களின் பெயர்கள் அரசுப் பதிவேட்டில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டது.

பெயர் நீக்கம் செய்யப்பட்ட நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனங்களின் அசையும் சொத்துகள், அசையா சொத்துகள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் இச்செய்தி, 58,000 வங்கிக் கணக்குகள் குறித்து 56 வங்கிகள் வழங்கியுள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டதாகும். மத்திய நேரடி வரிகள் வாரியம், நிதிப் புலனாய்வுப் பிரிவு, ரிசர்வ் வங்கி ஆகிய அமைப்புகளுடனும் இத்தகவல்கள் பகிரப்பட்டுள்ளதாம்.

இந்தியாவில் தொழில் தொடங்க முயற்சித்தவனை எல்லாம் குற்றவாளி ஆக்கும் முயற்சியை, மாற்றி- இந்தியாவில் இத்தனைக் குற்றவாளிகள் பாருங்கள் என்று கதை கட்டுகிறது மோடி அரசு.

இந்தியாவில் ஒருவனும் தொழில் தொடங்க முயலவே கூடாது என்பதே மோடியின் நோக்கம் என்பது தெள்ளத்தெளிவாக புரிகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,600

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.