சுங்கச்சாவடிகளில் விரைவுக்கட்டு அட்டை முறை பின்பற்றாத வாகனங்களிடம் இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஒன்றிய பாஜக அரசு கூறியுள்ளது. நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் விரைவுக்கட்டு அட்டை முறை இன்று நள்ளிரவு முதல் கட்டாயம் ஆகிறது. 03,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் விரைவுக்கட்டு அட்டை முறை இன்று நள்ளிரவு முதல் கட்டாயம் ஆகிறது. இதைப் பின்பற்றாத வாகனங்களிடம் இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஒன்றிய பாஜக அரசு கூறியுள்ளது. பாஜக தனிப்பெரும்பான்மையாக ஒன்றிய அரசில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து- தொழில் வணிகம் என்றால் குறிப்பிட்ட கார்ப்ப்ரேட்டுகளுக்கு என்றும், அரசு நிருவாகம் என்றால் நேரடியாக ஒன்றிய அதிகாரிகள் வசம் என்றும் சட்ட நிருவாக மாற்றத்தை முன்னெடுத்து வருகிறது. மாநிலங்களிடம் இருந்து வந்த பல்வேறு வரிவாங்கும் அதிகாரங்களை ஒரு நாடே ஒரே சரக்கு சேவை வரி என்ற தலைப்பில் மாற்றம் செய்ததும், மாநில அரசின் கைகளில் இருந்து வந்த மருத்துவக் கல்;லூரிகளை நீட் நுழைவுத் தேர்வின் மூலம் ஒன்றிய அரசு எடுத்துக் கொண்டதும், அந்த வகைக்கானவைகளே. இன்னும் ஒரே நாடு ஒரே ஆதார், ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை போன்றவைகள் எல்லாம் அந்த வகைக்கானவைகளே. ஒன்றிய நெடுஞ்சாலைகளை அமைத்துக் கொடுத்ததற்காகவும், அதன் தொடர் பேணலுக்கும் அந்தச் சாலைகளை அமைத்த தனியார் நிறுவனங்கள்- நெடுஞ்சாலைகளில் வாகனங்களிடம் சுங்கம் வசூலித்து வைத்துக் கொள்ளும் உரிமையை அரசிடம் பெற்று நீண்ட காலமாக வசூல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் நெடுஞ்சாலைகளில் சுங்கம் வசூலிக்கும் அந்த நிறுவனங்கள்- தாங்கள் சாலை அமைத்துக் கொடுத்த தொகையை எல்லாம்- எப்போதோ வாகனங்களிடம் வசூலித்து முடித்து விட்டன. இப்போது அவை வசூல் செய்யும் தொகை அந்த நிறுவனங்களுக்கு கூடுதல் ஆதாயம் என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. இந்த நிலையில்தாம்- சரக்கு சேவை வரியில், ஒன்றிய அரசுக்கு வரி நேரடியாகச் சென்று அப்புறம் மாநில அரசுகள் போராடி பெறும் வகைக்கானதாக மாற்றப்பட்டது மாதிரி- சுங்கத் தொகைகள் நேரடியாக ஒன்றிய அரசின் கணக்கிற்கு சென்று அப்புறம் சாலை அமைத்துக் கொடுத்த நிறுவனங்கள் பெற்றுக் கொள்ளும் வகைக்கு மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் விரைவுக்கட்டு அட்டை முறை, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. சுங்கச்சாவடிகளை வாகனம் கடக்கும்போது, சுங்கச்சாவடியில் பொருத்தப்பட்டுள்ள மின்னணு கருவி மூலம் அந்த வாகனத்துக்கான கட்டணம் தானியங்கி முறையில் கழித்துக்கொள்ளப்படும். விரைவுக்கட்டு அட்டை முறைக்கு வாகன உரிமையாளர்கள் மாறுவதற்கு காலக்கெடு அளிக்கும் வகையில், இதை கட்டாயம் ஆக்குவதற்கான நாள் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவில் இருந்து நாடு முழுவதும் விரைவுக்கட்டு அட்டை முறை கட்டாயம் ஆக்கப்படுவதாக ஒன்றிய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- விரைவுக்கட்டு அட்டை முறை இன்று நள்ளிரவு முதல் கட்டாயம் ஆகிறது. அதன்படி, ஒன்றிய நெடுஞ்சாலைகளில் உள்ள கட்டண சுங்கச்சாவடிகளில் அனைத்து வழிகளும் விரைவுக்கட்டு அட்டை வழிகளாக மாற்றப்படுகிறது. விரைவுக்கட்டு அட்டை ஒட்டாமலோ, முறையான விரைவுக்கட்டு அட்டை ஒட்டாமலோ அல்லது செயல்படக்கூடிய விரைவுக்கட்டு அட்டை ஒட்டாமலோ அந்த வழிகளைக் கடக்கும் வாகனங்கள், அவற்றுக்கான கட்டணத்தைப் போல் இருமடங்கு கட்டணம் செலுத்த வேண்டும். மின்னணு முறையில் கட்டணம் செலுத்துவதை ஊக்கப்படுத்தவும், காத்திருக்கும் நேரம், எரிபொருள் பயன்பாட்டை குறைக்கவும், தடையற்ற பயணத்தை மேற்கொள்ளவும் இதை நடைமுறைப்படுத்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, விரைவுக்கட்டு அட்டை முறை நடைமுறைப்படுத்தும் நாள் மேற்கொண்டு நீட்டிக்கப்படாது என்று ஒன்றியத் தரைவழி போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். அவர் கூறியதாவது:- ஏற்கனவே இரண்டு, மூன்று தடவை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்கொண்டு நீட்டிக்கும் திட்டம் இல்லை. சில வழித்தடங்களில் 90 விழுக்காடு வாகனங்கள், விரைவுக்கட்டு அட்டை முறைக்கு மாறிவிட்டன. இன்னும் 10 விழுக்காட்டு வாகனங்களே விடுபட்டுள்ளன. சுங்கச்சாவடிகளிலேயே விரைவுக்கட்டு அட்டை வில்லைகள் கிடைக்கின்றன. எனவே, எல்லா வாகன உரிமையாளர்களும் அவற்றை உடனடியாக வாங்கி பொருத்திக்கொண்டு பயணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.