Show all

மோடி தலைமைஅமைச்சரானால் இந்தியாவில் இதுவே கடைசி தேர்தல்! பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வருகிறது. தற்போது ஆ.இராசவும்

மோடி தலைமைஅமைச்சரானால் இந்தியாவில் இதுவே கடைசி தேர்தலாக இருக்கும் என்று பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வருகிறது. தற்போது ஆ.இராசவும் அதையே முன் வைக்கிறார். பாஜகவினர் கூட, 'ஆம் அப்படித்தான்' என்று கர்வப்படவும் செய்கிறார்கள்.

15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெரம்பலூர் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து முன்னாள் நடுவண் அமைச்சர் ஆ.இராசா இன்று கருத்துப்பரப்புதல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அதில், விசிக தலைவர் தொல்.திருமாவளவனும் கலந்துகொண்டார். கூட்டத்தில் ஆ.ராசா பேசியதாவது:

பாஜக ஆட்சியில், குடிஅரசு, மதச்சார்பின்மை, சமதர்மம் ஆகிய இந்தியாவின் முதன்மையான மூன்று கூறுகளுக்கும் ஆபத்து வந்துள்ளது. ஹிந்துத்துவாவுக்கு எதிரான கருத்துகளைச் சொன்னால் எங்களைக் கொல்ல வருகிறார்கள். கவுரி லங்கேஷ், கல்புர்கி, நரேந்திர தபோல்கர் உள்ளிட்ட பகுத்தறிவாளர்கள் இதனால் கொல்லப்பட்டனர்.

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இன்று ஆபத்து வந்துள்ளது. அதன் பணியாளர்களுக்கு மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை. எல்லா பொதுத்துறை நிறுவனங்களையும் மூடுகிறார்கள். ஊட்டியில் இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் என்ற தொழிற்சாலையை மூடி விட்டனர். அதனை புதுப்பிக்க காங்கிரஸ் ஆட்சியில் வாங்கிக் கொடுத்த 300 கோடி ரூபாயையும் 'சுவாகா' செய்து விட்டனர். இப்படியே போனால், நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தையும் மூடி விடுவார்கள் அல்லது தனியாருக்கு தாரை வார்த்து விடுவார்கள். இந்தியாவை ஹிந்து நாடாக்குவதில் முனைப்பாய் உள்ளனர்.

மோடி மீண்டும் தலைமைஅமைச்சரானால், இந்தியாவுக்கு இதுதான் கடைசித் தேர்தல். அரசியல் சட்டத்தை தோதாக வளைத்து, அதிபர் ஆட்சியைக் கொண்டு வந்துவிடுவர். சமூக நீதி இருக்காது. இந்தியா ஹிந்து தேசமானால், பாகிஸ்தானில் என்ன நிலைமையோ அதுதான் இங்கும் ஏற்படும்.

பாஜகவின் ஒற்றைக்கட்சி கலாச்சாரத்திற்கு எதிராக தேசம் காப்போம் என்ற உறுதி எடுத்துக் கொள்ள, மக்கள் முன்வரவேண்டும். இவ்வாறு ஆ.இராசா பேசினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,106.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.