Show all

வேலை தொடங்கிவிட்டது! நிர்மலா சீதாராமனின் பிரான்ஸ் பயணம்குறித்து ராகுல் நையாண்டி

25,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் அரசு, பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால், முந்தைய காங்கிரஸ் அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும், பல மடங்கு அதிக விலையை பா.ஜ.க அரசு வழங்க உள்ளது என்றும், நடுவண் அரசின்; நிறுவனத்துக்கு வழங்க இருந்த ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளித்தது என்றும், இதில் ஊழல் நடந்துள்ளதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. 

ரிலையன்ஸ் நிறுவனம் ரபேல் ஒப்பந்தத்தில் இடம்பெற வேண்டும் என இந்திய அரசுதான் வலியுறுத்தியது என பிரான்ஸ் முன்னாள் அதிபர் கருத்து தெரிவித்திருந்தார். இது, பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த ஊழல் தொடர்பாக வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உள்ளிட்டோர், உச்ச அறங்கூற்றுமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ஒப்பந்தத்தில் கொள்கை முடிவு எடுக்கப்பட்ட விதம், ஒப்பந்தம் எதன் அடிப்படையில் இறுதி செய்யப்பட்டது உள்ளிட்ட தகவல்களை அளிக்க உத்தரவிட்டது உச்ச அறங்கூற்றுமன்றம். 

ரபேல் விமானம் சர்ச்சை பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், நடுவண் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மூன்று நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். இதுகுறித்து கீச்சுவில் கருத்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: ரபேல் விமானம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நடுவண் அரசிடம் உச்ச அறங்கூற்றுமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. இது மிகவும் எளிமையானது. தலைமை அமைச்சர் முடிவெடுத்துவிட்டார். அவர் முடிவை நியாயப்படுத்தும் காரணங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், வேலை தொடங்கிவிட்டது. இதன் தொடர்பாகவே பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரான்ஸ் சென்றுள்ளார் எனப் பதிவிட்டுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,937.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.