04,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நீட் தேர்வில் தமிழில் கேட்கப்பட்ட வினாக்களில் கடுமையான பிழைகள் இருந்தன. 49 வினாக்களுக்கு தாறுமாறாக தமிழாக்கம் செய்யப்பட்டிருந்தது. சிறுத்தைக்கு சீத்தா என்றும், ரத்த நாளங்களுக்கு நலங்கள் என்றும், கேள்விகள் மொழி பெயர்க்கப்பட்டதை ஆதாரத்தோடு சமர்ப்பித்து, தமிழில் நீட் எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் 49 வினாக்களுக்கும் கருணை மதிப்பெண்ணாக மொத்தம் 196 மதிப்பெண்களை வழங்க தீர்ப்பு வாங்கப் பட்டது உயர் அறங்கூற்றுமன்ற மதுரைக் கிளையில். மாணவர் கலந்தாய்வை புதிதாக நடத்தவும் உத்தரவிட்டது. இதனால் தமிழில் தேர்வு எழுதிய, ஏழை, கிராமப்புற மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த மகிழ்ச்சியை நடுவண் அரசு இடைநிலைக் கல்வி வாரியம் நீடிக்கவிடவில்லை. உச்சஅறங்கூற்று மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழ் மொழி பெயர்ப்பாளர்களை வழங்கியதே தமிழக அரசுதான் என கூறியுள்ளது. தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் மிகவும் திறமையானவர்களாக அறியப்பட்டவர்கள். தாய் மொழி மீது மிகுந்த பற்றும், புலமையும் கொண்டவர்கள். ஆனால், கூகுளில் மொழி பெயர்த்ததை போல இருந்த ஒரு வினாத்தாள் தயாரிப்புக்காக, தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் மீது பழியைப் போட்டுவிட்டு, உயர் அறங்கூற்றுமன்ற மதுரை கிளை தீர்ப்புக்கு தடை கோர நினைக்கிறது நடுவண் அரசு இடைநிலைக் கல்வி வாரியம். இதில் மற்றொரு வேடிக்கை என்னவென்றால், நடுவண் அரசு இடைநிலைக் கல்வி வாரியம் இன்று உச்சஅறங்கூற்று மன்றத்தில், இதுபோல ஒரு பதிலை தெரிவித்த அதே நேரம், மேலவையில், மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கரும் அதே கருத்தை எதிரொலித்துள்ளார். அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் விஜிலா சத்யானந்த், ராஜ்யசபாவில் தமிழக மாணவர்கள் பட்ட துயரங்களை பற்றி எடுத்து கூறி பேசினார். அப்போது பிரகாஷ் ஜவடேக்கர், சிரித்தபடியே, இது தமிழக அரசு வழங்கிய மொழி பெயர்ப்பாளர்களால் மொழி பெயர்க்கப்பட்டதுதான் என்று பதில் அளித்தார். அதேநேரம், ராஜ்யசபா தலைவர் வெங்கய்யா நாயுடு, குறுக்கிட்டு, கன்னியாகுமரி மாணவர் ஏன் நீட் எழுத ராஜஸ்தான் அனுப்பப்பட்டார். இதை சரி செய்ய வேண்டாமா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பிரகாஷ் ஜவடேக்கர், அடுத்த ஆண்டு முதல் இந்த பிரச்சினை எழாமல் அரசு பார்த்துக்கொள்ளும் என்றார். நடுவண் அரசு இடைநிலைக் கல்வி வாரியம் மற்றும் நடுவண் அமைச்சர் இவ்வாறு தமிழக அரசுதான் மொழி பெயர்ப்பாளர்களை வழங்கியது என குற்றம்சாட்டியுள்ள நிலையில், தமிழக அரசின் கல்வித்துறையோ, இதுவரை அதை மறுக்கவில்லை. ஆனால் விஜிலா சத்யானந்த், நடுவண் அரசு மற்றும் நடுவண் அரசு இடைநிலைக் கல்வி வாரியக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். நடுவண் அரசு இடைநிலைக் கல்வி வாரியம் தான் மொழி பெயர்ப்பாளர்களை நியமித்தது என அவர் கூறியுள்ளார். இதன் மூலம், நடுவண் அரசும், நடுவண் அரசு இடைநிலைக் கல்வி வாரியமும் தமிழக அரசு மீது பழி போட்டுவிட்டு நீட் விசயத்தில் கருணை மதிப்பெண் வழங்காமல் தமிழக மாணவர்களை வஞ்சிக்க திட்டமிட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே நீட் கலந்தாய்வுகள் முடிவடைந்த நிலையில், இனிமேல் கலந்தாய்வு செய்தால், ஏற்கனவே தேர்வான பாடப் பிரிவுகளில், சுழியம் மதிப்பெண், ஒற்றைப் படை வாங்கியிருந்த உயர்தட்டு மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், எப்படியாவது கருணை மதிப்பெண் வழங்காமல் தடுக்க வேண்டும் என்பதே நடுவண் அரசு இடைநிலைக் கல்வி வாரியம் நோக்கமாக இருக்க முடியும் என்கிறார்கள் கல்வியாளர்கள். உயர்தட்டு மக்கள் பாதிக்கப்படுவதை எப்படி நடுவண் அரசு இடைநிலைக் கல்வி வாரியம் பொறுத்துக்கொள்ளும் என்று ஆதங்கமாக கேட்கிறார்கள் அவர்கள். தமிழக அரசு வலிமையாக இந்தப் பொய்களை தோலுரிக்காது என்ற தைரியத்தில் நடுவண் அமைச்சரும், இப்படி ஒரு பதிலை மேலவையில் கூறிருக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. எனவே தமிழக அரசு உடனடியாக, நடுவண் அரசு இடைநிலைக் கல்வி வாரியம் மற்றும் நடுவண் அரசின் இந்த கட்டுக்கதையை உடைக்கும் பதிலை உயர் அறங்கூற்று மன்றத்தில் பதிகை செய்து, தமிழக ஏழை எளிய மாணவர்கள் வாழ்க்கையில் விளக்கேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,854.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



