ரிலையன்ஸ் ஜியோ சிம்மிலிருந்து அழைக்கப்படும் கால்களுக்கு சரிவர இணைப்பு வழங்காத தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு டிராய் மொத்தம் 3,000 கோடி அபராதம் விதிக்க பரிந்துரை செய்துள்ளது. நம் நாட்டில் செல்பேசி அறிமுகமான காலத்தில் சாமானிய மக்களுக்கு அது எட்டா கனியாகவே இருந்தது. அதனைத் தகர்த்து எறியும் வகையில் 500க்கு செல்பேசியை அறிமுகம் செய்தது ரிலையன்ஸ் நிறுவனம். இது தொலைத்தொடர்பு துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்படிப்பட்ட நிறுவனம் 4ஜி சேவையில் களம் இறங்க போவதாக அறிவித்தது. இதனால் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவை குறித்த எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகரிக்க தொடங்கியது. கடந்த மாதம் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவை வர்த்தக ரீதியில் செயல்பாட்டுக்கு வந்தது. வாய்ஸ் கால்ஸ் இலவசம், குறிப்பிட்ட காலத்துக்கு இன்டர்நெட் டேட்டா இலவசம் என்று சுனாமி அறிவிப்புகளுடன் தொலைத்தொடர்பு துறையில் தனது முதல் அடியை ஜியோ எடுத்து வைத்தது. ஒரே மாதத்துக்குள் ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டி விட்டது. தொலைத்தொடர்பு துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்த பல முன்னணி நிறுவனங்களுக்கு ஜியோ வருகை பலத்த அடியாக அமைந்தது. ஜியோ அறிவிப்புகள் மற்ற நிறுவனங்களை அழித்து விடும் என்று அவை டிராயிடம் முறையிட்டன. ஆனால் டிராய் ஜியோவுக்கு சாதகமாக முடிவை அறிவித்தது. இதனையடுத்து ஜியோ போட்டியை சமாளிக்க அந்த நிறுவனங்களும் கட்டண குறைப்பு ஆயுதத்தை கையில் எடுக்க தொடங்கின. இந்த நிலையில், தனது வாடிக்கையாளர்களின் அழைப்புகளுக்கு சந்தையில் உள்ள நிறுவனங்கள் சரிவர இணைப்பு வழங்கவில்லை. இதனால் ஜியோ நெட்வொர்க்கில் தினந்தோறும் 52 கோடி அழைப்புகள் பெயிலர் ஆகிறது என்று பிரதமர் அலுவலகம், டிராய், மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்திடம் ரிலையன்ஸ் ஜியோ புகார் அளித்தது. டிராய் அந்த நிறுவனங்களிடம் விசாரணை நடத்தியது. அதன் அடிப்படையில், ஏர்டெல், ஐடியா, வோடா போன் ஆகிய நிறுவனங்களுக்கு மொத்தம் 3,000 கோடி அபராதம் விதிக்க டிராய் பரிந்துரை செய்துள்ளது. டிராய் அபராதம் விதிக்க பரிந்துரை செய்து இருப்பது தொடர்பாக அந்த நிறுவனங்கள் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் இத்துறை நிபுணர்கள் இது குறித்து கூறுகையில், டிராயின் உத்தரவை எதிர்த்து அந்த நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர அதிக வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்தனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



