பயங்கரவாதிகள் மீது எடுத்ததுபோன்று வரி ஏய்ப்பு செய்தவர்கள் மீதும் அதிரடி நடவடிக்கை பாயும் என பிரதமர் நரேந்திர மோடி சூசகமாக உணர்த்தினார். பிரதமர் நரேந்திர மோடி, பாராளுமன்ற தேர்தலில் குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியிலும், உத்தரபிரதேச மாநிலம், வாரணாசி தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் வாரணாசி தொகுதியை தக்க வைத்துக்கொண்டு, வதோதரா தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், அவர் பிரதமர் பதவி ஏற்ற பின்னர் முதல்முறையாக நேற்று வதோதரா சென்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். பிரதமர் நரேந்திர மோடி, மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ என்ற பெயரில் துல்லியமான அதிரடி தாக்குதல் நடவடிக்கை எடுத்ததுபோன்று, வரி ஏய்ப்பு செய்து கருப்பு பணம் குவித்து, அதை தானாக முன்வந்து அறிவிக்காதவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை சூசகமாக உணர்த்தினார். இது பற்றி அவர் குறிப்பிடும்போது, ‘‘தானாக முன்வந்து தகவல்கள் தாக்கல் செய்யும் திட்டத்தின்கீழ் ரூ.65 ஆயிரம் கோடி கருப்பு பணம், கணக்கில் வந்துள்ளது. இதற்காக எந்தவொரு ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’கும் (துல்லியமான அதிரடி தாக்குதல் நடவடிக்கை) நடத்தப்படவில்லை. நாங்கள் சர்ஜிக்கல் ஸ்டிரைக் மேற்கொள்ள தொடங்கினால், என்னவெல்லாம் வெளியே வரும் என்று கற்பனை செய்து பாருங்கள்’’ என குறிப்பிட்டார். தொடர்ந்து அவர் பேசும்போது, ‘‘ஜன்தன் யோஜனா திட்டத்தில் பயனாளிகளின் ஆதார் அட்டையை இணைத்து, இடைத்தரகர்களைநீக்கி, பணத்தை நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்குக்கு மாற்றியதில், ரூ.36 ஆயிரம் கோடியை மிச்சப்படுத்தி உள்ளோம்’’ என குறிப்பிட்டார். முன்னதாக அங்கு ஹார்ணி விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து பேசினார். அப்போது அவர், ‘‘அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகைக்கு சமமான எண்ணிக்கையில், இந்திய மக்கள் ஆண்டுதோறும் விமானத்தில் பயணம் செய்கிற நிலை உருவாகும் என எதிர்பார்க்கிறோம்’’ என்று கூறினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



