Show all

கேட்டது வீடு! கிடைத்ததோ கழிப்பறை

20,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தலைமை அமைச்சர் ஆவாஸ் யோஜ்னா திட்டத்தின் பயனாக கிடைக்கும் வீட்டை பெற பலமுறை முயன்றும் தோல்வியுற்றதால், ஒடிசாவை சேர்ந்த ஆதிவாசி ஒருவர் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கிடைத்த கழிப்பறையையே வீடாக பாவித்து வசித்து வருகிறார்.

ஒடிசா மாநிலம் சுந்தர்கார் மாவட்டத்தின் ஜலடா கிராமத்தில் உள்ள வீடு, அப்பகுதியில் உள்ளவர்களை மட்டுமல்லாது, மற்ற பகுதியினரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. ஏனெனில், ஒரு கழிப்பறையையே வீடாக மாறியுள்ளதே அதற்கு காரணம்.

ஜலடா கிராமத்தை சேர்ந்தவர் சோட்டு ரௌஷியா. இவர் பெற்றோர்களுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தநிலையில், ரூர்கேலா ஸ்டீல் பிளாண்ட் அமைப்பதற்காக, தமிழ்தொடர்ஆண்டு-5057ம் (1955) ஆண்டில் மாநில அரசு இவர்கள் தங்கியிருந்த இடத்தை பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு மாற்று இடம் அமைத்து தந்தனர். அரசு தந்த மாற்று இடம், இவர்கள் வசிப்பதற்கு போதுமானதாக இல்லை. ஆஸ்பெஸ்டாஸ் கூரை, எப்போது இடிந்துவிழும் என்று தெரியாத நிலையில் சுற்றுச்சுவர்கள.

இவ்வாறாக அன்;றாடம் பதட்டத்துடனேயே பொழுதுகள் கழிந்தன. இதனிடையே, சோட்டு ரௌஷியாவின் பெற்றோர்கள் காலமாயினர்.

வசிக்க அடிப்படை கட்டமைப்புகளுடன் கூடிய வீடு இல்லாததால், சோட்டு ரௌஷியா, மாநில அரசை தொடர்ந்து அணுகிவந்தார். இந்நிலையில், தலைமை அமைச்சர் ஆவாஸ் யோஜ்னா திட்டத்தின் கீழ் வீடற்றோருக்கு வீடு வழங்கப்படுவதை அறிந்து அதற்கு முயற்சித்தார். பலமுறை நடையாய் நடந்து அதற்கு முயற்சித்தும் அவருக்கு தோல்வி மட்டுமே பரிசாக கிடைத்தது.

இதனிடையே, கடந்த பிப்ரவரி மாதம், அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். ரௌஷியாவிற்கு தலைமை அமைச்சர் ஆவாஸ் யோஜ்னா திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்க இயலாது என்று அதிகாரிகள் கைவிரித்த நிலையில், அப்பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனக்குக் கிடைத்திருந்த கழிப்பறையையே, ரௌஷியா தனது வீடாக மாற்றியுள்ளார்.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கிடைத்த கழிப்பறையை வீடாக பாவித்து வாழ்ந்து வரும் ரௌஷியா, இயற்கை உபாதைகளுக்கு வெளியிடங்களையே பயன்படுத்தி வருவது தான் சோகம்!

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.