Show all

ஒவ்வொரு தனிமனிதனுக்கும் எதிரான கடுமையான ஆணை! யாருடைய கணினியை வேண்டுமானாலும் கண்காணிக்கும் அதிகாரம் 10 அமைப்புகளுக்கு

06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவில், யாருடைய கணினியை வேண்டுமானாலும் கண்காணிக்கும் அதிகாரத்தை 10 புலனாய்வு அமைப்புகளுக்கு நடுவண் அரசு வழங்கியுள்ள நிலையில், இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்தியாவில், யாருடைய கணினியை வேண்டுமானாலும் கண்காணிக்கவும், அதனுள் நுழைந்து எந்தத் தகவலையும் பெறவும், பறிமாறிக் கொள்ளப்படும் எந்த தகவல்களை வேண்டுமானாலும் பெற்று சேமித்துக் கொள்ளவும் உளவுத் துறை, போதை மருந்து தடுப்புப் பிரிவு, அமலாக்கத் துறை, நேரடி வரிகள் விதிப்பு வாரியம், வருவாய் புலனாய்வு அமைப்பு, நடுவண் குற்றப் புலனாய்வு அமைப்பு, தேசிய விசாரணை குழு, ரா பிரிவு, சைகை புலனாய்வு இயக்குநரகம், டெல்லி காவல்துறை ஆணையர் ஆகிய 10 அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கி நடுவண் அரசு நேற்று அரசாணை பிறப்பித்துள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000இன் படி இவ்வதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக, நடுவண் உள் துறை செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த அமைப்புகளுக்கு தேவைப்படும் பட்சத்தில் கணினி சேவை வழங்குபவரும் கணினியின் உரிமையாளரும், தகவலை பெற தேவையான தொழில்நுட்ப உதவிகளைக் கண்டிப்பாக வழங்க வேண்டும். தகவல்களை அளிக்கத் தவறினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். அரசின் இம்முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் பொருளாளர் அகமது பட்டேல் கூறுகையில், தொலைபேசி உரையாடல்கள், கணினி தகவல்களை வேவுபார்க்க 10 அமைப்புகளுக்கு மிகப்பெரிய அதிகாரம் வழங்கியுள்ளது கவலைக்குரியது. இது தவறாக பயன்படுத்தப்படலாம் என்றார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், இது ஆபத்தானது அல்லவா? ஒட்டுமொத்த கண்காணிப்பு என்பது மோசமான சட்டமாகும். நாட்டின் பாதுகாப்புக்காக என்றால், ஏற்கெனவே பல நிர்வாக முறைகள் இருக்கின்றன. இந்த உத்தரவால் அனைத்து மக்களும் பாதிக்கப்படுவார்கள். மக்களே உங்கள் கருத்துக்களை கூறுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவிக்கையில், அனைத்து இந்தியர்களையும் ஏன் குற்றவாளிகள் போல நடத்துகிறீர்கள்? ஒவ்வொரு இந்தியனையும் வேவுபார்க்கும் நோக்குடன் வழங்கப்பட்டுள்ள இந்த உத்தரவானது அரசியல் சட்டத்திற்கு விரோதமானதாகும். தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்யும் நெறிமுறைகளை மீறும் செயலாகும். ஆதார் தீர்ப்புகளுக்கு எதிரானதாகும் என்று விமர்சித்துள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது கீச்சுப்  பக்கத்தில், மோடியின் கையில் ஆட்சியைக் கொடுத்ததிலிருந்து, இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசர நிலை இருந்துவருகிறது. குடிமகன்களின் கணினிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைப்பதன் மூலம் மோடி அரசு அனைத்து விதிமுறைகளையும் மீறி வருகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதை சகித்துக்கொள்ள முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பல்வேறு தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,008.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.