06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருநங்கைகள் பாதுகாப்பு மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் திருநங்கைகள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஒன்று திரண்ட நூற்றுக்கணக்கான திருநங்கைகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருநங்கைகள் பாதுகாப்பு மசோதா நிறைவேறியது. நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்த 27 ஆலோசனைகள் சேர்க்கப்பட்டு இந்த மசோதா திருத்தப்பட்டது. திருநங்கைகள் பாதுகாப்பு தொடர்பாக தனிநபர் மசோதாவை மாநிலங்களவையில் திமுக பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா கொண்டு வந்திருந்தார். இதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இந்தநிலையில், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திருநங்கை மீனா கூறியதாவது: இந்த மசோதாவில் உரிமைகள் என்ற பெயரில் உப்புசப்பு இல்லாத காரியங்கள் மட்டுமே உள்ளன. இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் பிரிவு 21 மட்டும் எங்களது சமூகமக்களுக்கு அளித்து விட்டு இந்திய அரசியலமைப்புச்சட்ட பிரிவு 15 மேம்போக்காக கடைபிடிக்க சொல்கிறது. இது திருநங்கைளுக்கான கல்வி, வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வழங்காமல் அவரவர் சமூக இடஒதுக்கீட்டை பயன்படுத்தி கொள்ளவேண்டும் என அம்மசோதா கூறுவதாக தெரிவித்தார். திருச்சி சிவா கொண்டு வந்த தனிநபர் மசோதாவில் தான் உண்மையான திருநங்கைகள் சமூகம் வளர்ச்சிக்கான கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் நடுவண் அரசு அந்த தனி நபர் மசோதாவை ஏற்றுகொள்ளாமல் அவர்களே இடஒதுக்கீடு இல்லாத ஒரு மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறார்கள். நடுவண் அரசு இட ஒதுக்கீட்டிற்கு எதிரான தனது சிந்தனையை மக்களிடம் திணிக்கிறது என்றும் குற்றம்சாட்டினர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,008.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



