Show all

சரக்குமற்றும் சேவை வரியால் சிவகாசியில் ரூ.1000 கோடி மதிப்பிலான பட்டாசுகள் தேக்கம்

வடமாநிலங்களில் பட்டாசு கடைகளுக்கு அனுமதி மறுப்பு மற்றும் மோடி அரசின் சரக்கு மற்றும் சேவைவரி உள்ளிட்ட பல பிரச்சனைகளால் பட்டாசு தொழில் சரிவை சந்தித்துள்ளது. கேட்புகள் இல்லாததால் உற்பத்தி செய்யப்பட்ட ரூ.1000 கோடி மதிப்பிலான பட்டாசுகள் ஆலைகளிலேயே தேங்கி கிடக்கின்றன.

தீபாவளி என்றதும் புத்தாடைகளுக்கு அடுத்து நினைவுக்கு வருவது பட்டாசுகள். விருதுநகர் மாவட்டம் பட்டாசு தொழிலுக்கு பெயர் பெற்றது. நாடு முழுவதற்கும் மட்டுமின்றி வெளி நாடுகளுக்கும் இங்கிருந்து பட்டாசுகள் அனுப்பப்படுகின்றன.

ஆனால் சமீப காலமாக இந்த தொழில் நலிவடைந்து வருகிறது. இதற்கு சீன பட்டாசுகளின் வரவும், மோடி அரசின் சரக்கு மற்றும் சேவைவரி விதிப்பும்தான் காரணம் என பட்டாசு ஆலைகள் தரப்பில் கருத்து தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக வேலை நிறுத்தப் பேராட்டங்களில் ஈடுபட்ட பட்டாசு ஆலைகள் தசரா மற்றும் தீபாவளி விழாக்களைக் கருத்தில் கொண்டு வேலை நிறுத்தத்தை கைவிட்டு பட்டாசு தயாரிப்பில் இறங்கின.

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை வட்டாரங்களில் உரிமம் பெற்ற 830 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கு பட்டாசு தயாரிப்பு வேகமாக நடைபெற்றது. இதுதவிர உரிமம் பெறாமல் சிலர் குடிசை தொழிலாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வந்தனர். மாவட்டம் முழுவதும் 2 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும் 5 லட்சம் பேர் மறைமுகமாகவும் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தீபாவளியை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த பட்டாசுகள் தற்போது விற்பனை கேட்புகள் இல்லாததால் ஆலைகளிலேயே தேங்கி கிடக்கின்றன. இதனால் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

பட்டாசுக்கான மூலப்பொருட்கள் விலை 20 விழுக்காடு வரை உயர்ந்த போதிலும் தீபாவளி, தசரா விழாக்களை கருத்தில் கொண்டு வங்கி கடன் பெற்று பட்டாசு தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டும் அவர்கள் வேகத்திற்கு தடையாக வந்தது சரக்கு மற்றும் சேவை வரி.

பட்டாசுக்கான வரி 28 விழுக்காடு என அறிவிக்கப்பட்டதால் அதனை கொள்முதல் செய்ய விற்பனையாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

இதற்கு அடுத்த பாதிப்பை தந்தது டெல்லி, பஞ்சாப், மராட்டியம், ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என சிலர் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள். இந்த 6 மாநிலங்களிலும் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படாததால் அங்கிருந்தும் விற்பனை கேட்புகள் வரவில்லை.

மேலும் சில வடமாநிலங்களில் மழை, வௌ;ளம், வறட்சி காரணமாக பட்டாசு விற்பனை தேக்கத்தை சந்தித்துள்ளது.

இதுபோன்ற காரணங்களால் விருதுநகர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ரூ.1000 கோடி மதிப்புள்ள பட்டாசுகள், ஆலைகளிலேயே தேங்கி கிடக்கின்றன. இதனால் வங்கி கடனை செலுத்த முடியாமலும், தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமலும் பெரும் சங்கடத்தில் உள்ளனர்.

விழா காலங்களுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் பட்டாசு ஆலைகளின் பிரச்சனை தீர, வாழ்வாதாரம் காக்கப்பட மோடி அரசு சரக்கு மற்றும் சேவை வரியை குறைக்க வேண்டும். பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான வழக்கின் தீர்ப்பு வருகிற 23-ந்தேதி வர உள்ளது.

இதில் சாதகமாக தீர்ப்பு கிடைத்தால் பட்டாசு கேட்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக இயற்கையும் கை கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.