21,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரான்ஸ் நாட்டின் பிரபல ‘தசால்த்’ நிறுவனத்திடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடிக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஒப்பந்தம் செய்து கொண்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் ரபேல் போர் விமானம் ஒன்றை ரூ.560 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், தற்போது மோடி அரசு அதே ரக விமானத்தை ரூ.1,600 கோடிக்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதால் இதில் ஊழல் நடந்து உள்ளதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரபேல் போர் விமானம் இந்திய அரசு வாங்குவதற்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரி உச்ச அறங்கூற்று மன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். இது தொடர்பாக அவர் பதிகை செய்த மனுவில், 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்து உள்ளது. மேலும் அரசியல் சாசனத்தின் 253-வது பிரிவின் கீழ் இந்த ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்படவில்லை. எனவே இந்த விமானங்கள் வாங்குவதற்கு தடை விதிக்கவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. மேலும், இது தொடர்பாக தலைமை அமைச்சர் மோடி, முன்னாள் ராணுவ அமைச்சரும் , தற்போதைய கோவா முதல் அமைச்சருமான மனோகர் பாரிக்கர், தொழில் அதிபர் அனில் அம்பானி, பிரான்ஸ் தசால்த் நிறுவனம் ஆகியவற்றின் மீது வழக்குப் பதிவு செய்வதுடன் ஊழல் பணத்தை பறிமுதல் செய்யவேண்டும் என்றும் கோரப்பட்டு இருந்தது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கவேண்டும் என்றும் வழக்கறிஞர் சர்மா கேட்டுக் கொண்டிருந்தார். இந்த மனு தலைமை அறங்கூற்றுவர் தீபக் மிஸ்ரா, அறங்கூற்றுவர்கள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் முன்பாக நேற்று பரிசீலனைக்கு வந்தது. அப்போது அறங்கூற்றுவர்கள் இந்த மனுவை அடுத்த கிழமை விசாரிக்கும் விதமாக பட்டியலிட்டனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,902.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



