தூய்மை இந்தியா என்பது நரேந்திர மோடியின் கனவுத்திட்டம். காந்தி பிறந்த நாளை முன்னிட்டு கருத்துப் பரப்புதலை மோடி தொடங்கி வைத்தார். துடைப்பத்தைக் கையில் எடுத்து அவரே வீதியைத் தூய்மையும் செய்தார். காந்தி பிறந்த நாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கான தனது செய்தியில் குடிஅரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, மோடியின் இந்த தூய்மை இந்தியா திட்டத்தை வெற்றிபெறச் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். 5 ஆண்டுகளுக்கான தூய்மை இந்தியா திட்டம் 2019ஆம் ஆண்டு இதே அக்டோபர் 2 அன்று மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளில் நிறைவடைகிறது. தேசத் தந்தை மகாத்மா காந்தி மற்றும் லால்பகதூர் சாஸ்திரி ஆகியோரது கல்லறைகளுக்கு சென்று மலரஞ்சலி செலுத்திய பிறகு வால்மீகி பாஸ்தி சென்ற தலைமை அமைச்சர் மோடி அங்கு துடைப்பத்தை எடுத்து தானே வீதியைச் சுத்தம் செய்தார். இந்தக் காலனியில் தூய்மைப் பணியாளர்கள் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொசுக்களால் ஏற்படும் நோய்களால் உலகம் முழுவதும் 7,25,000 பேர் இறந்துள்ளதாக உலக சுகாதார மையம் கூறியுள்ளது. என்ன செய்தாலும் கொசுவை ஒழிக்க முடியவில்லை. கொசுவினால் பரவும் நோய்கள் டெங்கு, சிக்குன்குனியா, ஜிகா முதலான மோசமான வைரஸ் கிருமிகளால் பரவுகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை, மலேரியா, டெங்கு, சிக்குன்குனியாவினால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். கொசுக்களை ஒழிக்க வேண்டும் என்பதை மையக் கருத்தாகக்கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 20ஐ உலகக் கொசுக்கள் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையெல்லாம் பார்த்து, கவிஞன் பாரதியைப் போல ஆகா! எழுந்தது பார் யுகப் புரட்சி என்று உற்சாகத்தில் கிளர்ந்து எழுந்தவராய் தானேஷ் லஷ்தன் என்பவர், ‘நாடு முழுதும் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க நடுவண் அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று கேட்டு உச்சஅறங்கூற்று மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த உணர்வு மிகுந்த வழக்கு அறங்கூற்றுவர்கள் மதன் பி லோகூர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அறங்கூற்றுவர்கள் கூறுகையில் நாடு முழுதும் கொசுவை அகற்ற வேண்டும் என எந்த அறங்கூற்றுமன்றமும் உத்தரவு பிறப்பிக்கும் என நாங்கள் கருதவில்லை என்றனர். நாங்கள் கடவுள் அல்ல நாங்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, வீட்டில் கொசு, ஈ உள்ளது. அதனை விரட்டுங்கள் எனக்கூற முடியாது. நீங்கள் கேட்பதை கடவுள் தான் செய்ய முடியும் என்றனர். மேலும் கடவுள் மட்டும் செய்ய முடிந்ததை நாங்கள் செய்ய வேண்டும் என கேட்காதீர்கள். நாங்கள் கடவுள் அல்ல என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



