Show all

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவண் அரசுக்கு உச்ச அறங்கூற்றுமன்றம் கண்டனம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக ஆளும் மோடி அரசுக்கு உச்ச அறங்கூற்று மன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

இதையடுத்து, ‘காவிரி மேலாண்மை வாரியம் உருவாக்கப்படும் போது, அது தொடர்பாக நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்றும் நடுவர் மன்றத்தின் முடிவுகளை மாற்றியமைக்க நாடாளுமன்றத்துக்குத்தான் அதிகாரம் உள்ளது என்றும் நடுவண் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

காவிரி ஆற்று நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007-இல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் மனுக்களைத் பதிகை செய்துள்ளன. இந்த மனுக்கள் மீது உச்ச அறங்கூற்று மன்றத்தில் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது.

இதில் 26-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை தலைமை அறங்கூற்றுவர் தீபக் மிஸ்ரா, அறங்கூற்றுவர்கள் அமிதவா ராய், ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணை நடைபெற்றது.

அப்போது நடுவண் அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் அணியமாகி,

நீர் தாவா என்பதற்கான பொருள், மாநிலங்களுக்கு இடையிலான ஆற்று நீர் தாவாக்கள் என சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நீர் தாவா என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையே ஒடும் ஆறு, ஆற்று நீர் பயன்பாடு, நீர்ப் பங்கீடு கட்டுப்பாடு, ஆற்று நீர் ஒப்பந்தப் பயன்பாடு, ஒப்பந்த அமலாக்கம் ஆகியவை குறித்து தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையிலான நீர் தாவாக்கள் சட்டத்தின் 4 -ஆவது பிரிவின் படி, நடுவர் மன்றம் விசாரணை அமைப்பு என வரையறுக்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்வாறு அமைக்கப்படும் நடுவர் மன்றம், நீர் தாவா குறித்து விசாரணை நடத்தி, அவற்றுக்குத் தீர்வு காண்பது தொடர்பான அறிக்கையை நடுவண் அரசுக்கு மூன்று ஆண்டுகளுக்குள் அளிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

என்றார்.

அப்போது குறுக்கிட்ட அறங்கூற்றுவர்கள்,

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது, வகுக்காதது ஏன்?’

எனக் கேள்வி எழுப்பினர். மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வருவது தவறான அணுகுமுறை என்றும் அறங்கூற்றுவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதைத் தொடர்ந்து, சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார்,

நீர் தாவாவுக்குத் தீர்வு காணும் வகையில் நடுவண் அரசு உரிய திட்டத்தை வகுக்கலாம் என நீர் தாவா சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, வகுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்படவில்லை. நடுவர் மன்றத்தின் முடிவுகள் மறுஆய்வுக்கு உட்பட்டதாகும். காவிரி மேலாண்மை வாரியம் உருவாக்கப்படும் போது, அது தொடர்பாக நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும். நடுவர் மன்றத்தின் முடிவுகளை மாற்றியமைக்க நாடாளுமன்றத்துக்குத்தான் அதிகாரம் உள்ளது. இதனிடையே, தாற்காலிக ஏற்பாடாக தலைமை அமைச்சர் தலைமையில் காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் கீழ் காவிரி கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதுஎன்றார்.

அப்போது தமிழகத்தின் சார்பில் அணியமான வழக்குரைஞர் சேகர் நாப்டே,

காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை வெளியிடுவதற்கும் அறங்கூற்று மன்றத்தை தமிழகம் நாட வேண்டியிருந்ததுஎன்றார்.

மீண்டும் குறுக்கிட்ட அறங்கூற்றுவர்கள்,

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றை அமல்படுத்த வேண்டும். குறிப்பாக காவிரி ஆற்று நீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். அதை அமைக்கும் போது நடுநிலைமையுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்என்றனர்.

இதற்கு சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார்,

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவை அமல்படுத்துவதிலிருந்து நடுவண் அரசு ஒதுங்கவில்லை. காவிரி பிரச்னை தொடர்பாக உச்ச அறங்கூற்றுமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அறங்கூற்றுமன்ற உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம்

என்றார்.

அதற்கு அறங்கூற்றுவர்கள்,

அப்படியென்றால், தற்போது நடைபெறும் வழக்கு தொடர்பாக தீர்ப்பு அளித்த பிறகும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நடுவண் அரசுக்கு போதிய அவகாசம் அளிக்கப்படும்

என்றனர்.

அப்போது குறுக்கிட்ட கர்நாடகத்தின் சார்பில் அணியமான வழக்குரைஞர்கள் பாலி எஸ். நாரிமன், மோகன் கத்தார்கி,

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் வறட்சி குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, செழிப்பு குறித்து குறிப்பிடப்படவில்லை

என்றனர்.

இதைத் தொடர்ந்து, தமிழகம் சார்பில் அணியமான மூத்த வழக்குரைஞர்கள் சேகர் நாப்டே, உமாபதி ஆகியோர், ‘காவிரியில் நீர் திறந்துவிடுவதை ஆண்டுவாரியாக கணக்கிட்டால் தமிழகத்துக்கு உரிய நீர் கிடைக்காமல் போகும் நிலை உருவாகும். காவிரி விவகாரத்தில் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன. நடுவர் மன்றத்தின் உத்தரவை கர்நாடகம் நடைமுறைப்படுத்தவில்லை. இந்த விவகாரத்தில் தமிழகத்துக்கு கசப்பான அனுபவமே ஏற்பட்டுள்ளது. மேலும், காவிரி விசயத்தில் கர்நாடகத்தை சார்ந்தே தமிழகம் இருக்க வேண்டியுள்ளது. எனவே, காவிரி பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை உச்ச அறங்கூற்றுமன்றமே மேற்கொள்ள வேண்டும்

என்றனர்.

வாதங்களைப் பதிவு செய்து கொண்ட அறங்கூற்றுவர்கள், இது தொடர்பான விசாரணை புதன்கிழமையும் (செப்டம்பர் 20) நடைபெறும்

என தெரிவித்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.