30,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: டெல்லியில் இன்று நடைபெற்ற விடுதலைநாள் விழாவில் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி செங்கோட்டையில் கொடி ஏற்றி உரையாற்றினார். டெல்லியின் தமிழ் பள்ளிகளின் தமிழர்கள் தமது பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டு விழாவிற்கு வந்திருந்தனர். வெள்ளை வேட்டி சட்டையுடன் தோளில் துண்டுகளை தொங்கவிட்டபடி மாணவர்கள் இருந்தனர். மாணவிகள், பட்டுப்புடவைகளுடன் தலையில் மல்லிகை பூக்களுடன் காட்சி அளித்தனர். இவர்களில் பலர் தாவணி பாவாடை சட்டையும் அணிந்து வந்தனர். இதை விழாவிற்கு வந்த பார்வையாளர்கள் பார்த்து வியந்து பாராட்டினர். தமிழக அரசின் டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுரை ஆணையர் நா.முருகானந்தம், இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இது ஒரு புதிய முயற்சியாக டெல்லியின் செங்கோட்டை விழாவில் போற்றிக் கொள்ளப் பட்டது. இவர்களுக்கு உணவு, போக்குவரத்து, மற்றும் அழைப்பிதழ் ஆகியன தமிழ்நாடு அரசினால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனிடையில், டெல்லியின் சாணக்யபுரியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் விடுதலைநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளரும் முதன்மை உள்ளுரை ஆணையருமான ஜஸ்பீர்சிங் பஜாஜ் கொடியை ஏற்றி வைத்தார். இவ்விழாவில் முதன்மை உள்ளுரை ஆணையர் நா.முருகானந்தம் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,880.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



