15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையில் மாறி இருக்கும் அரசியல் சூழல் தமிழகத்தில் அரசியல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இலங்கையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை திடீரென அரசியல் சூழல் மாறியது. தலைமை அமைச்சராக இருந்த ரணில் விக்ரமசிங்கே பதிவியில் இருந்து இறக்கப் பட்டதாக அறிவிக்கப் பட்டு முன்னாள் அதிபர் மஹிந்தா ராஜபக்சே தலைமை அமைச்சர் ஆனாதாகக் கூறப்பட்டு வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அதிபர் பதவிக்கு மூன்றாவது முறையாக போட்டியிட்ட மஹிந்த ராஜபக்சே தோல்வியைத் தழுவினார். அதிபராக ஒருவர் இரண்டு முறை மட்டுமே இலங்கையில் போட்டியிட முடியும். ஆனால், சட்டத்தை மாற்றி மூன்றாவது முறையும் ராஜபக்சே போட்டியிட்டார். இவரை எதிர்த்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி என்ற பெயரில் அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரக் கட்சியும், ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றன. இந்தக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைந்தன. அதிபராக சிறிசேனா, தலைமை அமைச்சராக ரணில் பதவியேற்றனர். கடந்த ஆட்சியில் ராஜபக்சே ஆட்சியில் அமைச்சராக இருந்தவர்தான் சிறிசேனா. அவரிடம் இருந்து வெளியேறி தனிக்கட்சி அமைத்து அதிபரானார். இந்த நிலையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. அப்போது இருந்தே ஆளும் கூட்டணிக்கு ராஜபக்சே நெருக்கடி கொடுத்து வந்தார். இதற்கு வேறு பல காரணங்களும் இருந்தன. இந்த நிலையில் ராஜபக்சே மீதான பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க தனி அறங்கூற்றுமன்றம் அமைக்க பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து ரணில் நிறைவேற்றி இருந்தார். ராஜபக்சே மட்டுமின்றி அவரது சகோதர்கள் மற்றும் அவரது மகன் மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இந்த வழக்குகள் அனைத்தும் அடுத்த மாதம் விசாரணைக்கு வருவதாக இருந்தது. இந்த வழக்குகளில் சில வழக்குகள் மீது விரைவாக விசாரித்து இரண்டு ஆண்டுகளிலேயே தீர்ப்பு வருவதாக இருந்தது. இதற்கு காரணம் அந்த ஆண்டில் அதிபர் தேர்தல் என்பதால் வழக்கை விரைவுபடுத்தி தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதுதான். இது ராஜபக்சேவின் எதிர்கால நிலையை அச்சுறுத்தி அரசுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கினர். இந்த நிலையில்தான், அதிரடியாக தலைமை அமைச்சர் மாற்றம் ஏற்பட்டு இருப்பது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பின்னணியில் சிறிசேனாவின் ஒத்துழைப்பிற்கு சீனா நெருக்குதல் கொடுத்ததாகவும், நடுவண் பாஜக சுப்பரமணிய சாமி மூலம் பச்;சைக் கொடி காட்டியதாகவும் அறியப் படுகிறது. ராஜபக்சே எப்போதும் சீனாவுக்கு துணை நிற்பவர். ஆனால். ரணில் நடுநிலை வகித்து வந்தார். இந்த ஆட்சி மாற்றம் இந்திய மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தமிழக முகாம்களில் அடைக்கலம் ஆகி இருக்கும் இலங்கை வாழ் தமிழர்கள் தங்களது சொந்த மண்ணுக்கு என்றாவது ஒரு நாள் செல்ல மாட்டோமா என்ற ஏக்கத்துடன் இருந்தனர். அதற்கும் தற்போதும் பாதகம் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருக்கையில் பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாமல் இவர்களை நடுவண் அரசு இலங்கை அனுப்ப முடியாது. இந்திய மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும். தற்போது நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா முடக்கி இருக்கிறார். முடக்கம் நீக்கப்பட்ட பின்னர் தன்னுடைய பலத்தை ராஜபக்சே நிரூபிக்க வேண்டும். தற்போது குதிரை பேரம் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிறிசேனா, ராஜபக்சேவுக்கு 96 உறுப்பினர்கள் ஆதரவாக உள்ளனர். ஆனால், ரணிலிடம் 106 உறுப்பினர்கள் உள்ளனர். தனது பலத்தை நிரூப்பிக்க ரணிலுக்கு இன்னும் 7 உறுப்பினர்கள் தேவை. தற்போது பலத்தை நிரூபிக்க தேவையான வேளைகளில் ராஜபக்சே ஈடுபட்டுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தம் அவர்களை ராஜபக்சே சந்தித்துப் பேசியுள்ளார். ஆனால், ராஜபக்சேவுக்கு ஆதரவு இல்லை என்று அவர் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இலங்கை இந்தியா உறவில் மாற்றம் ஏற்பட உள்ளதோ இல்லையே, இந்தியவிற்கு மொல்லக் கொல்லும் நஞ்சாக இது அமையும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது. கடந்த ஆட்சியிலும் சீன பக்கமே தனது உறவை ராஜபக்சே வளர்த்துக் கொண்டு வந்துள்ளார். தென்கிழக்கு ஆசிய நாட்டில் பொருளாதாரத்தில் பலம் வாய்ந்த சீனா எப்போது இலங்கையை தனது கைக்குள் வைத்துக் கொள்ளவே விரும்பும். இலங்கைக்கும் வெளிநாட்டு முதலீடுகள் தேவைப்படுகிறது. சீனாவின் முதலீடுகளை ஈர்க்கவே ராஜபக்சே விரும்புவார். ரணில் விக்ரமசிங்கே போல் இந்தியா, சீனா என இரண்டு நாடுகளுடனும் ஒரே மாதிரியான உறவுகளை ராஜபக்சே வைத்துக் கொள்ளமாட்டார். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஹம்பன்தோட்டா துறைமுகம் திறக்கப்பட்டது. இந்த துறைமுகத்துக்கு ராஜபக்சே பெயர் வைக்கப்பட்டது. இந்த துறைமுகம் அமைக்க 361 மில்லியன் டாலர் செலவிடப்பட்டது. இதில் 85 விழுக்காடு பணத்தை சீனாவின் வங்கிதான் கொடுத்தது. இந்தக் கடனை அடைக்க முடியாமல் இறுதியில் இதன் பொறுப்பை சீனாவிடம் இலங்கை ஒப்படைத்தது. மீண்டும் இதுபோன்ற கடன்களை தூக்கி எறிந்து, முதலீடுகள் அளித்து இலங்கையை தங்களது கைக்குள் வைத்துக் கொள்ளவே சீனா விரும்பும். கடந்த மாதம் நடந்த மாலத்தீவு தேர்தலில் இந்தியாவுக்கு ஆதரவான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி வேட்பாளர் முகமது நஷீத் வெற்றி பெற்று அதிபரானார். குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்த மாலத்தீவு முன்னேற்றக் கட்சித் தலைவரும் அதிபராகவும் இருந்த அப்துல்லா யாமீன் தோல்வியைத் தழுவினார். அப்துல்லா முழுக்க முழுக்க சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டார். மாலத்தீவு தனது கையை விட்டுப் போனதை பொறுத்துக் கொள்ள முடியாத சீனா தற்போது இலங்கையில் அரசியல் குழப்பம் செய்து, தனது கட்டுப்பாட்டுக்குள் அந்த நாட்டை கொண்டு வந்துள்ளது. இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இறுதிக்கட்டப் போரில் அப்பாவி தமிழர்கள் குண்டுகள் வீசி கொல்லப்பட்டனர். அதற்கு இன்று வரை நியாயம் கிடைக்கவில்லை. குற்றவாளிக் கூண்டில் ஏற்றி ராஜபக்சே தண்டிக்கப்படவும் இல்லை. தற்போதைய இலங்கை அரசும் அவர் மீது குற்றம் சுமத்தியது. ஆனால், நியாயம் பெற்றுத் தரவில்லை. லண்டனைச் சேர்ந்த ஒளித்தடம் 4 தொலைக்காட்சி கொலைக் குற்றங்களை நிரூபிக்கும் வகையில் கணொளிகளை வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் மீண்டும் இலங்கையின் தலைமை அமைச்சராகும் முயற்சியில் உள்ளார் ராஜபக்சே. இத்துடன் நின்றுவிடாமல் விரைவில் அதிபர் தேர்தலை நடத்த வேண்டும் என்றும், சிறிசேனா மற்றும் ராஜபக்சே அணிகள் ஒன்று சேரும் என்றும் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபையா ராஜபக்சே கூறி வருகிறார். ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கையில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. கொழும்புவில் உள்ள தூதரகத்தை அமெரிக்க இழுத்து மூடிவிட்டது. அடுத்தது என்னவென்று உலக நாடுகள் காத்துக் கொண்டு இருக்கின்றன. இந்த நிலையிலும் உலகிலேயே உயரமான சிலையை, தமிழர் மொழிவிழியை குத்தி கீறி, சினக் கட்டுமானர்களை வைத்து, 'உலகிலேயே உயரமான சிலையை இந்தியாவிற்கு கட்டுமானம் செய்து கொடுத்த சீனா' என்ற பெருமையை வழங்கியிருக்கும் பாஜக நடுவண் அரசு விழித்துக் கொள்ளுமா? இந்தியாவைச் சீனச் சந்தைக்கு காவு கொடுக்குமா? -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,958.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



