28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தீ விபத்திலிருந்து பல பேரின் உயிரைக் காப்பாற்றிய இளம்பெண் தப்பிக்க முடியாமல் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி அருகே உள்ள குருகிராமில் 70வது செக்டரில் உள்ளது துலிப் ஆரஞ்சு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம். இந்த கட்டிடத்தில் ஒவ்வொரு தளத்திலும் 4 வீடுகள் உள்ளன. மொத்தம் 9 தளங்கள் இந்த கட்டிடத்தில் உள்ளன. இந்த அடுக்குமாடி குடியிறுப்பில் 5வது தளத்தில் வசித்த சுவாதி அகவை 34. இவர் வீட்டின் உள் அழகை மேம்படுத்தும் பொறியாளராக உள்ளார். இவர் தனது கணவர் மற்றும் 4 அகவை மகளுடன் வசித்து வருகின்றார். அவர் வசித்த அந்த கட்டிடத்தில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. ஆஸ்துமா நோயாளியான சுவாதி இன்று அதிகாலை இரவு 2.30 மணியளவில் வீட்டில் புகை வருவதை முதலில் உணர்ந்தார். தீ பிடித்து புகை வருவதை உணர்ந்த சுவாதி அக்கம் பக்கத்து வீடுகளின் கதவுகளைத் தட்டி, தீ பிடித்துள்ளது உடனே வெளியேறுங்கள் என அறிவுறுத்தியதோடு 6,7,8 மாடிகளில் உள்ள வீடுகளின் கதவுகளையும் தட்டி வெளியேறச் செய்தார். கடைசியாக மொட்டை மாடிக்குச் சென்று தப்பித்து விடலாம் என நினைத்திருந்த சுவாதி, அங்கு கதவு பூட்டப்பட்டிருந்ததால், கீழே இறங்கி செல்ல முயன்றார். ஆனால் புகை மூட்டத்தால் மூச்சு திணறி உயிரிழந்துள்ளார். தீ விபத்து ஏற்பட்டதை தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்து அரைமணி நேரம் கழித்து வந்தனர். ஆனால் அதற்குள் தீ வேகமாக பரவியது. புகை அதிமகாக இருந்ததால் தீ அணைப்பு வீரர்களும் கட்டிடத்தினுள் சென்று மீட்பு பணியில் ஈடுபட முடியவில்லை. சிறிது நேரம் கழித்து வீரர்கள் சென்று பார்த்த போது சுவாதி உயிரிழந்திருந்தார். சுவாதியின் உடலை கீழே கொண்டு வந்தனர். அவரைப் பார்த்து, இவர் தான் எங்கள் வீடு கதவுகளை தட்டி எங்களை காப்பாற்றினார் என கூறினர். பலரின் உயிரைக் காப்பாற்றி தன் உயிரை இழந்த சுவாதியின் மரணம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,940.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.