Show all

ரூபாய் தாள் விவகாரம்: வணிகர் சங்கம் வலியுறுத்தும் 12 அம்ச கோரிக்கைகள்

ரூபாய் தாள் விவகாரம் தொடர்பாக நடுவண் அரசிடம் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரூபாய் தாள் விவகாரம் தொடர்பாக பொதுமக்கள், வணிகர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு நடுவண் அரசு தீர்வு காண வேண்டும். இதுதொடர்பாக வணிகர்களின் 12 அம்ச கோரிக்கைகளை நடுவண் அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்பட அந்தந்த மாவட்ட தலைநகரங்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்பாட்டம் நடைபெற்றது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலர் கே.மோகன், நிர்வாகிகள் பி.பாண்டியராஜன், ஜோதிலிங்கம் உள்ளிட்டோர் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினர். இதைத் தொடர்ந்து, ஏ.எம்.விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு 21 நாள்களாகிவிட்டன. ஆனால், பணப்புழக்கம் சீரடையவில்லை. தமிழகம் முழுவதும் 90 சதவீத வர்த்தகம் முடங்கியுள்ளது. குறிப்பாக, தேநீர் கடைகள், பூ-காய்கறி விற்பனை என சிறிய, நடுத்தர வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதே நிலை நீடித்தால் வணிக நிறுவனங்களில் பணியாற்றும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படும். தற்போதைய சூழலில் 50 சதவீத வர்த்தகம் ரொக்கப் பரிவர்த்தனை மூலமாகவே நடத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. ரொக்க பணமில்லாத டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு வணிகர்கள் மாற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியதை ஏற்கிறோம். ஆனால் அதற்குரிய வசதிகளை நடுவண் அரசு முழுமையாக ஏற்படுத்தி தர வேண்டும். பாயிண்ட் ஆஃப் சேல் (பி.ஓ.எஸ்.) எனப்படும் பணஅட்டை தேய்ப்புக் கருவியை வணிகர்கள் பயன்படுத்த வேண்டும் என்று நடுவண் அரசு கூறுவதை மனதார வரவேற்கிறோம். ஆனால் நாடு முழுவதும் மின்சார வசதிகூட இல்லாத கிராமங்கள் இருப்பதையும் அரசு உணர வேண்டும். நடுத்தர மளிகைக் கடைகள் உள்பட வணிகர்களுக்கு பி.ஓ.எஸ். கருவி வழங்க நடுவண் அரசு நடவடிக்கை எடுப்பதுடன் அது தொடர்பான பயிற்சிகள் அளிக்க கிராமங்கள், நகர்ப்புறங்களில் பிரத்யேக குழுக்களை ஏற்படுத்த வேண்டும். அந்தக் கருவி பயன்பாட்டின்போது, சேவைக்காக விதிக்கப்படும் வரியை வெகுவாகக் குறைக்க வேண்டும். இன்றைய விலைவாசியை அடிப்படையாகக் கொண்டு வருமான வரி விலக்கு வரம்பை 10 லட்சமாக உயர்த்த வேண்டும். அதற்கு மேல் ரூ.20 லட்சம் வரை வரி விதிப்பு 5 விழுக்காடாக இருக்க வேண்டும். வருமான வரி விதிமுறைகளை எளிமைப்படுத்தினால் மட்டுமே அனைத்து மக்களும், வணிகர்களும் வங்கிகளில் பண பரிவர்த்தனை செய்வதற்கும், டிஜிட்டல் முறையில் மாறுவதற்கும் வழி ஏற்படும். இது தொடர்பாக வணிகர்களின் 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பிரதமர், நடுவண் நிதியமைச்சர், ரிசர்வ் வங்கி ஆளுநர் ஆகியோரை நாடு முழுவதும் உள்ள பல்வேறு வணிகச் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் சந்தித்து மனு அளிக்கவுள்ளோம். மேலும் இது குறித்த வணிக அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் தில்லியில் டிசம்பர் 2-ஆம் தேதி நடைபெறவுள்ளது. வணிகர்களின் கோரிக்கைகளை நடுவண் அரசு ஏற்காவிட்டால் தமிழகம் முழுவதும் வியாபாரிகள் சார்பில் தொடர் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர். ஆர்ப்பாட்டத்தில் பேரமைப்பின் மண்டலத் தலைவர் சதக்கத்துல்லா, மாவட்டத் தலைவர் எம்.மாரித்தங்கம் உள்பட ஏராளமான வியாபாரிகள் கலந்துகொண்டனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.