14,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் இருந்து வெங்கடாச்சலம் என்ற பயணி சென்னைக்கு தொடர் வண்டியில் 2-ம் வகுப்பில் படுக்கை வசதியில் பயணித்துள்ளார். அப்போது, இரவில் அவரின் காலை எலி ஒன்று கடித்ததில் ரத்தம் சொட்டியது. இது குறித்து அனுமதிச்சீட்டு பரிசோதகரிடம் சென்று வெங்கடாச்சலாம் முறையிட்டார். ஆனால், அவரோ தொடர் வண்டியில் உடனடியாக சிகிச்சை அளிக்கும் வசதியில்லை, அடுத்த தொடர் வண்டி நிலையத்தில் அளிக்கலாம் என்று கூறிச் சென்றுவிட்டாராம். இதையடுத்து, எழும்பூர் தொடர்வண்டிநிலையம் வந்த பயணி வெங்கடாச்சலம் இதுகுறித்து தொடர்வண்டித் துறை நிலையத்தில்புகார் அளித்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதன்பின் அவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தனக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கும், காயத்துக்கும் இழப்பீடு கேட்டு மாவட்டநுகர்வோர் தீர்ப்பாயத்தில் வெங்கடாச்சலம் வழக்குத் தொடர்ந்தார். வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாய அறங்கூற்றுவர் ஆர்.வி. தீனதயாளன், உறுப்பினர் எஸ். இராசலட்சுமி ஆகியோர் இன்று தீர்ப்பளித்தனர். அதில், எலிக் கடிக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் வெங்கடாச்சலத்துக்கு மனஉளைச்சல் ஏற்படுத்தியதற்காக தொடர்வண்டித் துறை துறை ரூ25 ஆயிரம் இழப்பீடு தர வேண்டும். மருத்துவச் செலவு செய்தமைக்காக ரூ.2 ஆயிரமும், வழக்குச் செலவுக்காக ரூ.5 ஆயிரமும் அளிக்க வேண்டும். இந்தத் தொகையை அடுத்த 3 மாதங்களுக்குள் அளிக்காவிட்டால், 9 விழுக்காடு வட்டி விதிக்கப்படும் என்று உத்தரவிட்டார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,895.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



