ரூபாய் தாள்கள் விவகாரத்தில் நடுவண் அரசு எடுத்த முடிவை மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் இன்று ஒரு படி மேலே சென்று, பிரதமர் மோடி மோசமான அரசியல்வாதி எனவும் பொய்களைப் பரப்புகிறார் என்றும் கடுமையாக விமர்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காள மாநில முதல் அமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மோடி அனைத்து நம்பகத்தன்மையையும் இழந்து விட்டார். மோசமான அரசியல்வாதி மோசமான நிர்வாகியாக அவர் திகழ்கிறார். அவர் பொய் கூறுகிறார். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று பட்டு நிற்கின்றன. மோடி மட்டும் வேறுபட்டு நிற்கிறார். ரூ.500, 1000 தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பால் ரூ.1.28 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ரூபாய் தாள் தடை இந்திய பொருளாதார நடவடிக்கைகளைக் கடுமையாக பாதித்துள்ளதாக உலகின் மிகச்சிறந்த ஆய்வு நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது. சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மோடி இளைப்பாறிக் கொண்டு பொய்களை பரப்பி வருகிறார் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடுவண் அரசின் முடிவுக்கு எதிராக நவம்பர் 28 ஆம் தேதி பேரணி நடத்தவும் திரிணாமூல் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



