Show all

அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதற்குக் கட்டுப்பாடு: தேர்தல் ஆணையம் பரிந்துரை

பெயரிடப்படாமல் வழங்கப்படும் ரூ.2,000-க்கும் அதிகமான நன்கொடைகளைப் பெற அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று நடுவண் அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. பெயரிடப்படாமல் வழங்கப்படும் அதிக அளவு நன்கொடையைப் பெறுவதற்கு சட்ட ரீதியில் அரசியல் கட்சிகளுக்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. ஆனால், 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 29சி பிரிவில், இதுபோன்ற நன்கொடை விவரங்களை அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ரூ.20,000-க்கும் அதிகமான தொகைக்கே இந்த சட்ட விதி பொருந்தும். இந்நிலையில், நடுவண் அரசுக்கு தேர்தல் நடவடிக்கைகளில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் பரிந்துரைகளை அனுப்பியுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ரூ.2,000 அல்லது அதற்கு அதிகமான தொகையில், பெயரிடப்படாமல் வழங்கப்படும் நன்கொடைகளை பெறுவதற்கு அரசியல் கட்சிகளுக்குத் தடை விதிக்க வேண்டும். அதுபோல், 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தில், அரசியல் கட்சிகளுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விலக்கை, மக்களவை அல்லது மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே அளிக்கும் வகையில் மாற்ற வேண்டும். தற்போதைய விதிப்படி, ரூ.10, ரூ.20 போன்ற சிறிய தொகை கூப்பன்களை பெறும் நன்கொடையாளர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட வேண்டியதில்லை. ஆனால், இதுபோன்ற சிறிய தொகைகள் ஒன்றாக சேரும்போது மிகப்பெரிய தொகையாகும். அதையும் கணக்கிட வேண்டும். அதையும் வெளிப்படையானதாக்க வேண்டும். இதற்கு ஏற்ற வகையில், நன்கொடையாளர்களுக்கு வழங்கும் கூப்பன்களின் மதிப்புகள் அனைத்தையும் அரசியல் கட்சிகள் கட்டாயம் பதிவு செய்து வைப்பதை சட்ட அமைச்சகம் உறுதி செய்ய வேண்டும் என்று தனது பரிந்துரையில் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.