ஐந்து முறையும், கலந்துரையாடல் தேவையில்லை என்ற நிலைப்பாட்டை உழவர்கள் வெளிப்படுத்திய நிலையிலும், செவ்வாய்க் கிழமை மீண்டும் பேசலாம் வாங்க என்று வேளாண் சட்ட நீக்;கத்திற்கு பதினேழாவது நாளாக போராடி வரும் உழவர்களை அழைத்துக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு பாஜக. 28,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உழவர்கள் இந்தியா அளவில் எடுத்துவரும் போராட்டம் 17வது நாளை எட்டியுள்ளது. ‘மூன்று வேளாண் சட்டங்களை நீக்கிக் கொள்கிறோம்’ என்று ஒற்றை வரியில், ஒன்றிய பாஜக அரசு அறிவிக்க முயலாமல், எப்படியும் உழவர்கள் சலிப்படையாமலா போவார்கள் என்ற நம்பிக்கையில், வெளிப்பார்வைக்கு கலந்துரையாடல் போர்வையில், உழவர்களுக்கு வேளாண்சட்டங்களை பயிற்சி அளிக்கவே முயன்று வருகிறது. ஐந்து முறையும், கலந்துரையாடல் தேவையில்லை என்ற நிலைப்பாட்டை உழவர்கள் வெளிப்படுத்தினாலும், இதற்கு ஐந்தாவது கட்ட கலந்துரையாடலும் தோல்வி என்று தலைப்பிடப்படுகின்றது ஒன்றிய பாஜக அரசு களத்தில் இருப்பதாக செய்தியாக்க. இந்த நிலையில் போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்த உழவர்கள் முடிவு செய்துள்ளனர். இதன்படி டெல்லி எல்லையில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்க வரி செலுத்தாமல் பயணிக்கும் போராட்டத்தை உழவர்கள் முன் எடுத்துள்ளனர். ஹரியானா மாநில எல்லையான அம்பாலாவில் உள்ள சம்பு சுங்கச்சாவடியில் சுங்கம் வசூலிக்கும் அறைகள் பூட்டப்பட்டுள்ளன. இதனால் அவ்வழியாக அனைத்து வாகனங்களும் இலவசமாக பயணித்து வருகின்றன. ஹரியானா மாநிலம் பஸ்தாரா சுங்கச்சாவடியில் நேற்று நள்ளிரவில் இருந்தே சுங்கச்சாவடிகளை விவசாயிகள் கைப்பற்றி வாகனங்களை இலவசமாக அனுப்பினர். நாளை முதல் தொடர்வண்டி மறியல் மற்றும் டெல்லியை நோக்கி வரும் சாலைகளை மறித்து போராட்டங்களை முன்னெடுப்பது என்று உழவர்கள் தீர்மானித்துள்ளனர். பஞ்சாப், ராஜஸ்தானில் இருந்து ஏராளமான டிராக்டர்களில் உழவர்கள் டெல்லியை நோக்கி வந்தவண்ணம் உள்ளனர். டெல்லியில் நடந்து வரும் உழவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க நடிகர் இரஜினி காந்த் அகவையுள்ள (70 அகவை) உழவர் ஜர்னைல்சிங் என்பவர், பஞ்சாப்பில் இருந்து டெல்லிக்கு மிதிவண்டிப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். ஜக்ரோனில் இருந்து டெல்லிக்கு செல்லும் 327 கிலோமீட்டர் சாலையில் ஜர்னைல் சிங்குக்கு உழவர்கள் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, தஞ்சை மாவட்டத்தில் உழவர்கள் தொடர்வண்டி மறியல் போராட்டம் நடத்தினர். திருச்சியில் இருந்து சென்னை செல்லும் சோழன் தொடர்வண்டியைப் பூதலூர் பகுதியில், காவிரி உரிமை மீட்புக்குழுவினர் மறித்தனர். தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் அமைந்துள்ள, ஒன்றிய உற்பத்தி வரி அலுவலகத்தை காவிரி உரிமை மீட்புக்குழுவினர் முற்றுகையிட்டனர். அந்த அமைப்பினர் ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டகாரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனை அடுத்து, போராட்டக்காரர்கள் அரை மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதே போன்று திருச்சியில் தொடர்வண்டி மறியல் போராட்டம் நடத்த முற்பட்ட காவிரி உரிமை மீட்புக் குழுவினர் மற்றும் தமிழக உழவர்கள் சங்கத்தினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் தொடர்வண்டி சந்திப்புற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 3 வேளாண் சட்டங்களையும் நீக்கும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் முழக்கமிட்டனர். இதனை அடுத்து அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



