14,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119 குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தல் கருத்துப் பரப்புதல் மேற்கொண்ட காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, அமிதாப்பை விட பெரிய நடிகர் பிரதமர் மோடி என குற்றம் சாட்டியுள்ளார். குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தலை யடுத்து, பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியல்களை வெளியிட்டு கருத்துப் பரப்புதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலில் கருத்துப் பரப்புதல் மேற்கொள்ள மோடி மற்றும் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் குஜராத்தில் நேற்று சுற்றுப்பயணம் செய்தனர். அம்ரேலி, பவநகர் மற்றும் போடட் மாவட்டங்களில் கருத்துப் பரப்புதலில் ஈடுபட்டனர். அம்ரேலியில் ராகுல் காந்தி பேசியதாவது: குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் ஆட்சி அமைக்கும். அப்போது உழவர்கள் கடனை 10 நாட்களுக்குள் தள்ளுபடி செய்ய ஆணை பிறப்பிக்கப்படும். சிறு மற்றும் குறு வணிகர்கள் நலன் காக்க திட்டம் கொண்டு வரப்படும். பிரதமர் மோடி மக்களை ஏமாற்றி வருகிறார். தன்வணிகக் கூட்டாளிகளுக்காக மட்டுமே இந்திய அரசை பயன் படுத்திக் கொள்ளும் மோடி, வெற்றுச் சொல்லாடலால் மக்களுக்கு நல்லவர் போல நடிக்கிறார். பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனை விட மோடி பெரிய நடிகர். கண்ணில் எந்த காண்டாக்ட் லென்சும் அணிந்து கொள்ளாமல் கண்ணீர் வடிப்பதில் கைதேர்ந்தவர். தேர்தலுக்கு சில தினங்கள் முன்பாகவே மோடி தனது கட்சி அடையப்போகும் தோல்விக்கு கண்ணீர் வடிக்கப் போகிறார். ரபேல் விமானங்கள் வாங்குவது தொடர்பாக தனியாரிடம் ஒப்பந்தம் போட்டது ஏன் என்பது குறித்து விளக்க தயாரா? இட இதுக்கீடு கேட்டு போராடிய படேல் சமூகத்தை சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டது குறித்த விசாரணைக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? மேலும், உழவர்கள் பிரச்சினை, பண மதிப்பிழப்பு, சரக்குசேவை வரி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பினார். தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,622
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



