பழைய ரூ.500,1000 தாள்கள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பையடுத்து நாடு முழுவதும் ரூபாய் தாள்களை மாற்ற மக்கள் கடும் சிரமப்பட்டு வரும் நிலையில், குஜராத்தில் உள்ள இரண்டு துறைமுக அதிகாரிகள் ரூ2.5 லட்சம் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டனர். ஆனால், இதில் விநோதம் என்னவெனில் லஞ்சப்பணம் அனைத்தும் புதிய ரூ2ஆயிரம் தாள்கள் என்பது கவனிக்கத்தக்கது. நவம்பர் 11 ஆம் தேதி முதல் புதிய ரூ.2ஆயிரம் தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் தாள்கள் இன்னும் புழக்கத்தில் போதிய அளவில் வாராததால் மக்கள் கடும் சிரமப்பட்டு வரும் நிலையில், லஞ்சப்பணமாக இவ்வளவு தொகையில் புதிய ரூ2ஆயிரம் தாள்கள் கிடைத்தது சோதனையிடச்சென்ற அதிகாரிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. குஜராத்தில் உள்ள கண்டாலா துறைமுகத்தில் அதிகாரிகளாக பணியாற்றி வரும் பி ஸ்ரீனிவாசு மற்றும் கே கோமேட்கர் ஆகியோர் லஞ்சம் பெற்றதாக கைதுக்குள்ளான அதிகாரிகள் ஆவர். இவர்கள் 4.4லட்சம் தொகைக்கான நிலுவை பில் தொகையை மாற்றுவதற்காக தனியார் மின்னனு நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெற்றுள்ளனர். இதையடுத்து குஜராத் ஊழல் தடுப்பு பிரிவால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீனிவாசுவின் வீட்டில் இருந்து மேலும் ரூ. 40 ஆயிரம் தொகையை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். புதிய ரூபாய் தாள்கள் லஞ்சப்பணமாக கிடைத்தது எப்படி என்பது பற்றி ஊழல் தடுப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



