Show all

போர்த்துறை அதிகாரிக்கே இவ்வளவுதான் பாதுகாப்பா! விடைதேடலில் மக்கள். கடற்படை அதிகாரி கடத்தி எரித்துக் கொலை

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த சுராஜ்குமார் துபேயை கடத்திய மர்ம கும்பல், ரூ.10 லட்சம் பிணையத் தொகை கேட்டு தராததால், அந்தப் போர்த்துறை அதிகாரியை உயிருடன் எரித்துக் கொன்றது, கடும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

25,தை,தமிழ்த்தொடராண்டு-5122: ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த, இருபத்தியேழே அகவையுள்ள சுராஜ்குமார் துபேயை கடத்திய மர்ம கும்பல், ரூ.10 லட்சம் பிணையத் தொகை கேட்டு தராததால், அந்தப் போர்த்துறை அதிகாரியை உயிருடன் எரித்துக் கொன்றது, போர்த்துறை குறித்த பெருமிதம் கொள்ளும் மக்களுக்கு கடும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

சுராஜ்குமார் துபே, கோவையில் உள்ள இந்தியக் கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். சுராஜ்குமார் துபேயை சென்னை விமான நிலையம் அருகே கடத்திய மர்ம கும்பல், அவரை மகாராஷ்டிரா மாநிலத்திற்கு கடத்தி சென்று பணம் கேட்டு குடும்பத்தை மிரட்டி உள்ளது. பணம் தராததால் அவரை உயிருடன் எரித்துக் கொலை செய்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் பகுதியில் வேவாஜி வனப்பகுதிக்கு சுராஜ்குமார் துபேவை அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் கடத்திச் சென்றனர். பின்னர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள துபேயின் குடும்பத்தினருடன் தொலைபேசியில் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் கடற்படை வீரர் சுராஜ்குமார் துபேவின் குடும்பத்தினரிடம் பேசும் போது, உங்கள் துபேவை நாங்கள் கடத்தி வைத்துள்ளோம். அவரை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.10 லட்சம் பிணையத் தொகையாக நாங்கள் சொல்லும் இடத்தில் கொண்டு வந்து கொடுங்கள் என மிரட்டி உள்ளார்கள். நாங்கள் சொன்னபடி பணத்தை தராவிட்டால் சுராஜ்குமார் துபேயை கொன்று விடுவோம் என்றும் தொலைபேசியில் துபே குடும்பத்தினரிடம் பேசிய ஆள் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

ஆனால் இதை துபேயின் குடும்பத்தினர் பொருட்படுத்தவில்லை. மேலும் ரூ.10 லட்சத்தை தரமுடியாது என்று மறுத்து விட்டார்கள். இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் கடற்படை அதிகாரி சுராஜ்குமார் துபேயை மகாராஷ்டிராவின் பால்கரில் உள்ள வேவாஜி வனப்பகுதியில் தீ வைத்து உயிருடன் எரித்துள்ளார்கள். இதை உறவினர்களுக்கு தெரிவித்துவிட்டு, அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். 

இதுபற்றி உறவினர்கள் கொடுத்த தகவலின் பேரில் காவல்துறையினர் பால்கர் வனப்பகுதிக்குச் சென்றார்கள். அங்கு பாதி எரிந்த நிலையில் கிடந்த துபேயின் சடலத்தை மீட்டு தகானு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு அவரது நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து அவரை கடற்படைக்குச் சொந்தமான அஸ்வினி மருத்துவமனைக்கு கொண்டுபோய் சேர்த்தார்கள். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக பால்கர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மர்மஆட்கள் 3 பேர்கள் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.