Show all

அதிரடி மேற்கொண்டது கோயில்நிருவாகம்! ஐம்பது ஆண்டுகளாக பாதுகாப்பில்லாமல் கிடக்கும் திருப்பதி கோயில் சொத்துகள்

ஐம்பது ஆண்டுகளாக பாதுகாப்பில்லாமல் கிடக்கும் திருப்பதி கோயில் சொத்துகள் குறித்தான கவலை இப்போதுதான் வந்திருக்கிறது கோயில் நிருவாகத்திற்கு. எப்போது வரும்? பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அதைக் கட்டிய மன்னன் யார் என்பதான தேடல் குறித்து.

15,தை,தமிழ்த்தொடராண்டு-5122: ஆந்திர மாநிலம் திருப்பதி திருக்கோயிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி பார்வை செய்து வருகின்றனர். இவர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேற ஏராளமான காணிக்கைகளை வாரி வாரி வழங்குகின்றனர். அது பணமாகவோ, நகையாகவோ, நிலமாகவோ இருக்கின்றன. இவற்றில் நிலமாக அளிக்கப்படும் காணிக்கைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ளன.

இவற்றை அந்நியர்கள் யாரும் பயன்படுத்தாத வகையில் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கோயில் நிர்வாகத்திடம் உள்ளது. இதனிடையே, திருப்பதி ஏழுமலையானுக்கு சொந்தமான பல்வேறு சொத்துக்கள் உரிய முறையில் பேணப்படாமல் இருந்தது. கோயில்நிருவாக இணை செயல் அதிகாரி சதா பார்கவி மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்தது. இதனால் அந்நியர்கள் பலர் ஆக்கிரமிக்கும் வேலைகளில் ஈடுபட்டதும் அப்போது கண்டறியப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, திருப்பதி கோயிலுக்கு சொந்தமாக அசையா சொத்துக்களை பாதுகாப்பது தொடர்பாக திருப்பதியில் உள்ள வுவுனு நிர்வாகக் கட்டடத்தில் கோயில்நிருவாகச் செயல் அதிகாரி ஜவகர் ரெட்டி மற்றும் இணை செயல் அதிகாரி சதா பார்கவி தலைமையில் நடைபெற்றது. அதில், கடந்த ஐம்பது ஆண்டுகளாக நாடு முழுவதும் இருக்கும் திருப்பதி கோயில் சொத்துக்கள் என்னென்ன, அதன் தற்போதைய நிலை என்ன, அவற்றின் மீதான சட்டப்பாடான சிக்கல்கள் பற்றி விவாதிக்கப்பட்டன.

கூட்டத்தின் முடிவில், திருப்பதி கோயிலுக்கு சொந்தமான நிலப்பகுதிகளில் உரிய பலகைகள் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கம்பி வேலிகள் அமைக்கவும், காவல் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் மனையியல், பொறியியல், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு துறைகளை உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு செயல்வீரர்கள் குழு என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இவர்களிடம் கோயில்நிருவாகத்திற்குச் சொந்தமான நிலப்பகுதிகளை பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயில் சொத்துக்களை கோயில்நிருவாகம் விற்பனைக்கு வைத்ததால் பெரும் சர்ச்சை எழுந்தது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அந்த முடிவில் இருந்து கோயில்நிருவாகம் பின்வாங்கியது. அதேபோல், பக்தர்கள் காணிக்கையாக அளித்த தொகையை வங்கிகளில் மட்டும் அல்லாமல் மாநில அரசின் பாதுகாப்பு பத்திரங்களாக வாங்க கோயில்நிருவாகம் முடிவெடுத்தது. அதற்கும் எதிர்ப்பு கிளம்பியதால் அந்த முடிவில் இருந்தும் கோயில்நிருவாகம் பின் வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பதியின் பழைய பெயரான திருவேங்கடத்தை சங்க இலக்கியங்களான சிலப்பதிகாரமும், சாத்தனாரின் மணிமேகலையும் குறிப்பிட்டுள்ளன. இந்த மலைகளை பண்டைய தமிழகத்தின் வடபுறத்து எல்லையாக சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கோயில் எந்த ஆண்டு கட்டப்பட்டது என்பது தெரியவில்லை என்றாலும் இது பல பேரரசுகளால் பேணப்பட்டு வந்திருக்கிறது. பல்லவர், சோழர், பாண்டியர், சாளுக்கியர், விசயநகர மன்னர்களால், இந்தக் கோவில் பேணப்பட்டு வந்திருக்கிறது. இந்தக் கோயிலில், கோயில் சுவர்களில் காணப்படும் கல்வெட்டுகள் அனைத்தும் தமிழ்க் கல்வெட்டுகளாகும். இந்தக் கல்வெட்டுகளை முழுமையாக படிக்கும் முயற்சியை எந்த அரசோ, தனியாட்களோ இதுவரை முன்னெடுக்கவில்லை. அவைகள் முழுமையாகப் படிக்கப்படும் போதே இந்தக் கோயில் வரலாறு நமக்குக் கிடைக்கும். அந்த வரலாறு தற்போது கோயிலை உடைமையாக வைத்திருப்பவர்களுக்குத் தேவைப்படவில்லை யாதலால் அது குறித்த முயற்சி முன்னெடுக்கப்படவில்லை. 

இந்தியத் தொன்மையைத் தோண்ட முயன்றாலே தமிழன் தலை நிமிர்கிறான் என்பதால், இந்தியா விடுதலை பெற்ற காலத்திலிருந்து- காங்கிரசானாலும் சரி, தற்போதைய பாஜகவானாலும் சரியே ஒன்றிய ஆட்சி வடஇந்திய பார்ப்பனிய மார்வாரி, பணியாக்களிடமே இருக்கிற காரணம் பற்றி இந்தியத் தொன்மையைத் தோண்ட முயல்வதேயில்லை. 

விசய நகர பேரரசின் மன்னரான கிருஷ்ண தேவராயர், இந்தக் கோவிலுக்காக தங்கமும் மற்ற விலை உயர்ந்த நகைகளையும் நன்கொடையாகத் தந்துள்ளார். இந்தக் கோவிலை ஒட்டி நிறைய கோவில்களையும் கட்டியுள்ளார். திருப்பதியில் இருந்து சில கி.மீ.கள் தொலைவில் தென் மேற்கு புறம் தள்ளி இருக்கும் சந்திரகிரி என்னும் கிராமம் விஜயநகர சக்கரவர்த்தியின் இரண்டாம் தலைநகரமாக விளங்கியது.

வைணவம் பெரிதாக பின்பற்றப்பட்ட ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டத்தில் திருப்பதி, ஆழ்வார்களால் போற்றப்பட்டது. பக்தி இயக்கத்தைச் சேர்ந்த ஆழ்வார்கள் தமிழ்மண்ணில் அவர்கள் இயற்றிய பாடல்களுக்காகவும், இலக்கியங்களுக்காகவும் பெயர் போனவர்கள். வைணவ கலாச்சாரத்தில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக விளங்குவது திருப்பதி ஆலயம். பதினோராம் நூற்றாண்டில் இந்தக் கோவிலின் வழிபாட்டு நடைமுறைகள் இராமானுஜ ஆச்சார்யரால் முறையாக்கப்பட்டன.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சென்னை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இக்கோயில் இருந்தது. அப்போதுதான் தற்போது நடைமுறையில் உள்ள கோயில்நிருவாகம் உருவாக்கப்பட்டது. இந்திய விடுதலைக்குப்பின் மொழிஅடிப்படையான மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது திருப்பதி தெலுங்கு மாநிலத்திற்குச் சென்றது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.