ரூபாய் நோட்டு மாற்றம் மூலம் திட்டமிட்ட கொள்ளைக்கு நடுவண் அரசு வழிவகுப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டியுள்ளார். மாநிலங்களவையில் நேற்று உரையாற்றிய மன்மோகன் சிங், பிரதமர் மோடியின் நடவடிக்கையை கடுமையான வார்த்தை பிரயோகத்தால் கண்டித்தார். கறுப்பு பணத்தையும், கள்ள நேட்டுக்களையும் ஒழிப்பதற்காகவும், தீவிரவாதத்திற்கு நிதி அளிக்கப்படுவதை தடுப்பதற்காகவும் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்ததாகக் பிரதமர் கூறும் காரணத்தை ஏற்றுக்கொள்வதாகக் கூறிய மன்மோகன் சிங், ஆனால் இந்தத் திட்டத்தை நிறைவேற்றிய விதத்தில் மிகப்பெரிய நிர்வாகச் சீர்கேடு நிகழ்ந்திருப்பதாகக் கூறினார். பிரதமர் மோடி கேட்டுக்கொள்ளும் 50 நாட்கள் என்பது ஏழை மக்கள், விவசாயிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கடும் சித்ரவதை காலம் என்று கூறிய மன்மோகன் சிங் இதன் மூலம் அவர்களின் வாழ்க்கை மிகவும் அபாயகரமான அளவிற்கு மோசமாகி விடும் என்றார். இந்த இடையூறுகள் குறுகிய காலம் தான் நீண்டகால அடைப்படையில் நாட்டிற்கு இந்த திட்டம் நன்மை பயக்கும் என்று கூறப்படும் வாதத்தை ஏற்க மறுத்த மன்மோகன் சிங், நீண்ட காலம் என்றால் எவ்வளவு நீண்ட காலம் என்று கேள்வி எழுப்பினார். இந்த நீண்ட பயணத்தில் நாம் அனைவரும் இறந்துபோவோம் என்ற இங்கிலாந்து பொருளாதார அறிஞர் ஜான் ஹெய்ன்சின் வார்த்தைகளை சுட்டிக்காட்டிய மன்மோகன் சிங் அனைவரும் இறந்த பிறகு நடுவண் அரசின் நடவடிக்கையால் யாருக்கு என்ன பயன் என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். ரூபாய் நோட்டு மாற்றம் வங்கி அமைப்பின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை அழித்துவிடும் என்று கூறிய மன்மோகன் சிங், வங்கியில் தான் வைப்பிட்ட தொகையை பொதுமக்கள் திரும்பப் பெற முடியாத நாடு ஒன்றை பிரதமர் மோடியால் அடையாளம் காட்ட முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். நடுவண் அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் அருவருக்கத் தக்க மிக மோசமான நிர்வாகத்துக்கு ரிசர்வ் வங்கி முன்னுதாரணம் ஆகிவிட்டது என்று கூறிய மன்மோகன் சிங், ரூபாய் ஒழிப்பு விவகாரத்தில் திட்டமிட்ட கொள்ளைக்கு நடுவண் அரசின் நடவடிக்கை வழிவகுப்பதாகக் கண்டனம் தெரிவித்தார். மக்கள் மீது தவறிழைப்பதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிப்பது போல் நடுவண் அரசின் நடவடிக்கை உள்ளதாகவும் மன்மோகன் சிங் குற்றம்சாட்டினார். பிரதமர் மோடியின் நடவடிக்கையால் நாட்டின் வருமானமும், உள்நாட்டு மொத்த உற்பத்தியும் 2 விழுக்காடு வரை சரிவடையும் என்று கூறிய மன்மோகன் சிங், இந்த அளவு குறைத்து மதிப்பிடப்பட்டது தான், மிகைப்படுத்தப்பட்டது அல்ல என்றார். பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் அமைப்புச்சாரா தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு குறு விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார் என மன்மோகன் சிங் குற்றம்சாட்டினார். நாட்டில் 90 விழுக்காட்டுத் தொழிலாளர்கள் அமைப்புச்சாரா தொழிலாளர்களாக இருப்பதையும் 55 விழுக்காடு பேர் வேளாண்துறையைச் சார்ந்திருப்பதையும் மன்மோகன் சிங் சுட்டிக்காட்டினார். கறுப்பு பணத்தையும், ஊழலையும் ஒழிக்க நடைமுறைக்கு சாத்தியமான வழியை பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும் என்றும், மக்கள் தற்போது சந்திக்கும் சிரமங்களிலிருந்து விடுபட தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மன்மோகன் சிங் கோரிக்கை விடுத்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



