மோடி கடந்த 8-ம் தேதி ரூ.500 மற்றும் 1,000 நோட்டுக்களைத் திரும்ப பெறும் நடவடிக்கையால் கறுப்புப் பணத்தையும் கள்ள நோட்டையும் ஒழிக்க முடியும் என்று கருதி, செல்லாது என அறிவித்தார். இதனையடுத்து மக்கள் தங்களின் அன்றாட செலவுகளுக்கு வங்கிக்கு சென்று காத்திருந்து தங்களிடம் உள்ள ரூ.500 மற்றும் 1,000 நோட்டுக்களைத் திருப்பி, மாற்றுப்பணம் பெற்று வருகின்றனர். இந்நிலையில் திருமண வீட்டாருக்கு வங்கிகளில் இருந்து பணம் எடுக்க வாய்ப்பு அறிவிக்கப் பட்டிருந்த போதிலும் திருமண வீட்டார் குறைந்த அளவு பணத்தால் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். சில திருமண நிகழ்ச்சியில் பணஅட்டை தேய்ப்புக் கருவியின் மூலம் மொய் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் நிகழ்ச்சியும் நடந்தேறி வருகிறது. மணமக்கள் பணஅட்டை தேய்ப்புக் கருவியுடன் அமர்ந்திருப்பதான அப்படியொரு ஒரு நிகழ்வு பஞ்சாப் மாநிலத்தில் நடந்த திருமண விழாவில் நடைபெறும் காட்சி இணையத்தில் அதிவேகமாகப் பரவி வருகிறது. கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் இது குறித்த படங்களை தனது சுட்டுரை பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



