குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் முரளி
மனோகர் ஜோசி அல்லது சுஷ்மா சிவராஜை வேட்பாளராக நிறுத்த பாஜக பரிசீலித்து வருகிறது.
பாஜக மூத்த தலைவர் அத்வானி பெயரை பாஜக பரிசீலிக்காததால்
அவர் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்
போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டார்.
அந்த தேர்தலில் பாஜக வென்று ஆட்சியைக் கைப்பற்றியதும் அக்கட்சியின் மூத்த தலைவர்களான
அத்வானி, முரளி மனோகர் ஜோசி உள்ளிட்ட பலரும் ஓரங்கட்டப்பட்டனர். அப்போது குடியரசுத்
தலைவர் தேர்தல் வேட்பாளராக அத்வானி முன்னிறுத்தப்படுவார் எனவும் கூறப்பட்டது. வரும் சூலை மாதம் தற்போதைய குடியரசுத் தலைவர்
பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிவடைகிறது. குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பை
விரைவில் தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. இந்த நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில்
ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோசி அல்லது
வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசிவராஜை முன்னிறுத்த பாஜக திட்டமிட்டு வருகிறது. 1944-ம் ஆண்டு 10 வயதில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில்
இணைந்தவர் முரளி மனோகர் ஜோசி. 1975-ம் ஆண்டு அவசரச் சட்ட நெருக்கடி காலத்தில் 19 மாதம்
சிறைவாசம் அனுபவித்தவர். 1992-ல் பாபர் மசூதி இடிப்பின் போது கைது செய்யப்பட்டவர்.
பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்., முரளி மனோகர் ஜோசி பெயரை பரிந்துரைத்துள்ளதாம்.
சுமித்ரா மகாஜன் இதேபோல் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சிவராஜ் பெயரையும் ஆர்.எஸ்.எஸ்.
இயக்கம் பரிந்துரைத்துள்ளதாம். மேலும் மக்களவைத்தலைவர் சுமித்ரா மகாஜன் பெயரும் குடியரசுத்
தலைவர் வேட்பாளர்கள் பட்டியலில் அடிபடுகிறது. இந்தப் பரிசீலனைப் பட்டியலில் அத்வானி பெயரே இடம்பெறவில்லை.
எப்படியும் தம்மை குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்னிறுத்திவிடுவார்கள் என இலவு காத்த
கிளியாக இருந்த அத்வானிக்கு தற்போது பாஜக அல்வா கொடுத்துவிட்டது என்றே கூறப்படுகிறது.
இதனால் அத்வானி கடும் அதிருப்தி அடைந்துள்ளாராம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



