டெல்லியில் உழவர்கள் நடத்தி வரும் போராட்டம் 18வது நாளைக் கடந்து தீவிரமாகி வருகிறது. 29,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக அரசு முன்னெடுத்துள்ள கருப்புவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உழவர்கள் நடத்தி வரும் போராட்டம் 18வது நாளைக் கடந்து தீவிரமாகி வருகிறது. டெல்லி- ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் உழவர்கள் தெரிவித்திருந்த நிலையில், அங்கு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக உழவர்கள் சங்க பேராளர்களிடம் ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து கலந்துரையாடல் நடத்தி வருகிறது. ஒன்றிய பாஜக அரசு, ‘இது நல்ல சட்டம் இது நல்ல சட்டம்’ என்று கிளிப்பிள்ளை போல திரும்பத் திரும்ப சொல்வதாலேயே இது உழவர்களுக்கான சட்டமாகி விடாது. நாங்களே விரும்பாத சட்டம், சில கார்ப்பரேட்டுகள் முன்னேற்றத்திற்கான சட்டம் வேண்டாமே என்கின்றனர் உழவர் பெருமக்கள். ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து அடாவடி காட்டிவரும் நிலையில், தங்கள் போராட்டத்தை விரிவுபடுத்தவும் உழவர் சங்கங்கள் திட்டமிட்டுள்ளன. அந்தவகையில், டெல்லியில் போராடி வரும் உழவர்களுக்கு ஆதரவாக ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த உழவர்கள் டிராக்டர் பேரணி நடத்தப் போவதாகவும், டெல்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் மறியலில் இன்று ஈடுபடப் போவதாகவும் தெரிவித்திருந்தனர். ஏற்கனவே சிங்கு, திக்ரி, காஜிப்பூர் என டெல்லியின் எல்லை பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான உழவர்களால் தலைநகர் திணறி வருகிறது. எனவே, டெல்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலை எல்லையில் நேற்று 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். கான்கிரீட் தடுப்புகளை கொண்டு சாலைகள் மூடப்பட்டன. அதனால், 2வது முயற்சியாக இன்று நெடுஞ்சாலை முற்றுகையை உழவர்கள் கையிலெடுத்துள்ளனர். இதையடுத்து ஜெய்ப்பூர்-டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் அரியானா எல்லையில் உழவர்கள் முன்னேறுவதை தடுக்க கூடுதல் கான்கிரீட் கட்டைகளும் அடுக்கப்பட்டு உள்ளன. இதைத்தவிர, தொடர்வண்டி போக்குவரத்தையும் முடக்க திட்டமிட்டுள்ள உழவர் சங்கத் தலைவர்கள், காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாநிலை இருக்கவும் முடிவு செய்துள்ளனர். மேலும் அனைத்து மாவட்ட முதன்மை நகரங்களிலும் நாடு தழுவிய போராட்டங்கள் நடத்தப்பட இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், டெல்லியில் உழவர்கள்; நடத்தும் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



